திரை நட்சத்திரங்கள், குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பண்டிகை தினங்களில் தனது வீட்டின் முன் கூடும் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்தவகையில், இன்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லம் முன்பு இன்று காலை முதலே ரசிகர்கள் ஏராளமாகக் குவிந்தனர்.
ரசிகர்களின் நீண்ட நேர காத்திருப்புக்குப் பிறகு, காலை நேரத்தில் தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், வீட்டின் முன்பு திரண்டிருந்த திரளான ரசிகர்களைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவர்களை நோக்கிக் கைகளை அசைத்துத் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “ரசிகர்கள் உட்பட அனைவரும் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்வதாக” கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்து ஆரவாரத்துடன் முழக்கங்களை எழுப்பினர்.
தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மீண்டும் கைகளை அசைத்து, அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளித் திருநாளைக் கொண்டாட வாழ்த்து கூறி ரஜினிகாந்த் விடைபெற்றார்.



