இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, நடிகர் ரஜினிகாந்த் தனது சக நடிகர்கள் மற்றும் படக்குழுவினரிடம் எப்போதும் அன்பாக நடந்துகொள்வார் என்பது அனைவருக்கும் தெரியும்.. அவருடன் நடித்த சக நட்சத்திரங்கள் பலரும் இதனை வெளிப்படையாக பலமுறை கூறியுள்ளனர்.. ரஜினியின் தாராள மனப்பான்மை பற்றிய கதைகள் இந்தியத் திரையுலகில் நன்கு அறியப்பட்டவை.
ரஜினியின் நிலையில் இருந்த சிலர் ஆணவத்துடன் நடந்துகொண்ட போதிலும், ரஜினிகாந்த் எப்போதும் அமைதியான மற்றும் நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். இது அவர் தனது நட்சத்திர அந்தஸ்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதைக் காட்டுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகர் ரஜினி உடனான தனது அனுபவத்தை நடிகர் அரவிந்த் சாமி பகிர்ந்துள்ளார்..
சமீபத்திய ஒரு உரையாடலில், நடிகர் அரவிந்த் சாமி தனது முதல் படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அதில் அவர் தற்செயலாக ரஜினிகாந்தின் படுக்கையில் உறங்கிவிட்டதாகவும், கண்விழித்துப் பார்த்தபோது ரஜினி தரையில் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் கூறினார்.
நடிகர் அரவிந்த் சாமி 1991-ல் மணிரத்னம் இயக்கத்தில், ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி நடித்த ‘தளபதி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். படப்பிடிப்புத் தளத்தில் தனது ஆரம்ப நாட்களில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த அரவிந்த், திரைப்படத் தளங்களில் பொதுவாகப் பின்பற்றப்படும் படிநிலைகள் பற்றி தனக்குத் தெரியாது என்றும், பின்பற்றப்பட வேண்டிய சில விதிமுறைகள் உள்ளன என்பதைத் தான் உணரவில்லை என்றும் கூறினார்.
மேலும் “எனக்கு அப்ப்போது இது எல்லாமே புதிது. எனக்கு அந்தப் படிநிலைகள் பற்றித் தெரியாது. விதிமுறைகள் பற்றியும் தெரியாது. நமது திரையுலகம் இந்த விதிமுறைகள் விஷயத்தில் சற்று… ஒருவிதமாக செய்ற்கையானது. ஒரு நாள், நான் படப்பிடிப்புக்கு சீக்கிரமாகச் சென்றுவிட்டேன். நான் சோர்வாக இருந்ததால், ஒரு படுக்கையைப் பார்த்து அதில் படுத்து உறங்கிவிட்டேன்..
நான் கண்விழித்தபோது, அதே அறையில் ரஜினி சார் தரையில் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் அவருடைய அறைக்குள் சென்று படுக்கையில் உறங்கிவிட்டேன்.. அவர் ஏன் தரையில் உறங்க வேண்டும்? என்று அதிர்ச்சி அடைந்தேன்.. ரஜினியின் ஒப்பனைக் கலைஞர், ‘உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவர் என்னிடம் சொன்னார்’ என்றார். அதுதான் ரஜினி சார்,” என்று அவர் நினைவு கூர்ந்தார், உடனே கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
நடிகரின் ரஜினிகாந்தின் இந்தச் செயல் தனக்கு நிறைய கற்றுக்கொடுத்ததாக அரவிந்த் பகிர்ந்துகொண்டார். ஒருவர் மற்றவரை எழுப்ப விரும்பாதது என்பது மிகவும் நுட்பமான ஒரு விஷயம். அவர், ‘இவன் ஒரு புது ஆள், இவன் ஏன் இங்கே இருக்கிறான், இவனை விரட்டிவிடுங்கள்’ என்று நினைப்பது போன்றது அல்ல அது. அதே சமயம், அவர் தரையில் படுத்துத் தூங்குவதில் மிகவும் சௌகரியமாக இருந்தார், அவர் அதைத்தான் செய்துகொண்டிருந்தார். அதாவது, அந்த ஒரு சம்பவத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன,” என்று அரவிந்த் சாமி நெகிழ்ச்சியாக கூறினார்.



