தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இருந்து 6 புதிய எம்பிக்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, திமுகவில் இருந்து 4 எம்.பி.க்களும், அதிமுகவில் இருந்து 2 எம்.பி.க்களும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிமுக சார்பில் இருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
அதிமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செம்மலை, வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, கொள்கை பரப்புச் செயலாளர் வித்யா ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது. இதற்கிடையே, கடந்த மக்களவை தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் தருவதாக, அதிமுக வாய்மொழி உத்தரவாதம் அளித்தது. அதன்படி, தங்களுக்கு ஒரு எம்பி சீட் கிடைக்கும் என தேமுதிகவினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால், அப்படி எந்தவொரு உத்தரவாதமும் கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி திடீரென பெல்டி அடித்தார். இதனால், தேமுதிகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையே, செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவுக்கு எம்பி சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. மக்களவைத் தேர்தல் பேச்சுவார்த்தையின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது, 5 இடங்களுடன் ஒரு எம்பி பதவி தருகிறோம் என அதிமுக உறுதி அளித்தது. சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினால் தான் மக்கள் உங்களை நம்புவார்கள்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தான், நேற்று தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் தான் இந்த ஆலோசனை நடைபெற்றது. மாநிலங்களவை எம்.பி. சீட் வழங்குவது தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையே வார்த்தை மோதல் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.