தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான சூழல் பாமகவுக்குள் உருவாகியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ‘ஈகோ’ மோதல், ஒரு அரசியல் கட்சியின் பிளவாக உருவெடுத்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட கருத்து வேறுபாட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் இருவரும் இருவேறு துருவங்களாக களம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் கைகோர்த்துள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு முற்றிலும் மாறுபட்ட முடிவை எடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு ஆர்வம் காட்டியபோதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்தக் கதவுகள் மூடப்பட்டன. பின்னர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கைகோர்க்க எடுத்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. இதனால், எந்தக் கூட்டணியிலும் இடமில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட டாக்டர் ராமதாஸ், தற்போது சுமார் 30 தொகுதிகளில் தனித்து வேட்பாளர்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த முடிவின் பின்னணியில் அரசியலைத் தாண்டிய ஒரு பழிவாங்கும் நோக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தனது பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்த அன்புமணியை பாடம் புகட்ட வேண்டும் என்ற முனைப்பில் ராமதாஸ் இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வலுவான வேட்பாளர்களை நிறுத்தி, வன்னியர் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் அவர்களை தோற்கடிப்பதே ராமதாஸின் தற்போதைய ஒற்றை இலக்காக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் இந்தத் தீப்பொறி மோதலை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள திமுக தரப்பு தயாராகி வருகிறது. ராமதாஸின் தனித்துப் போட்டியிடும் முடிவு, நேரடியாக அன்புமணியின் வாக்கு வங்கியை சிதைக்கும் என்பதால், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு திமுக மறைமுகமாக பல உதவிகளை செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாமகவின் கோட்டையான வட மாவட்டங்களில் “அப்பா – மகன்” மோதல் யாருக்கு சாதகமாக முடியும் என்பதும், அது பாமகவின் எதிர்காலத்தை எப்படிப் பாதிக்கும் என்பதும் வரும் தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



