வெளிப்புறத்தில் முள் போலத் தோன்றினாலும், உள்ளே இனிமையும், ஊட்டச்சத்தும் நிரம்பியிருக்கும் பழம் ரம்புட்டான். இந்த பழம் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிற ஆற்றல் தருகிறது. தென்கிழக்காசிய நாடுகளான மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகியவை தான் இதன் பூர்விகமாகும். ஆனால், தற்போது தமிழகத்தின் சில பகுதிகளிலும் இது விளைகிறது.
பச்சை நிறத்தில் காயாகத் தோன்றி, பழுத்தபோது சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தைப் பெறும் இந்த பழம், சுவையில் இனிப்பும் லேசான புளிப்பும் கலந்து சுவை மிகுந்ததாகும். அதனாலே சிறுவர்களிடம் முதல் விருப்பமாக மாறிவிட்டது. ரம்புட்டானில் உடலுக்கு தேவையான பலவகை சத்துக்கள் நிரம்பியுள்ளன. வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதம் என பல நன்மைகள் இருக்கிறது.
இப்பழம் தண்ணீர் சத்து அதிகமுள்ளதால், உடலுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கும். நாக்கு வறண்டுபோவதைத் தடுப்பதோடு, உடலில் ஆற்றலை அதிகரிக்கும் வேலையையும் செய்கிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் சத்துக்கள், உடல் உழைப்புக்கேற்ப சக்தியையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன. உடலின் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, திசுக்களின் பராமரிப்பு என பலவகைகளிலும் இது பங்களிக்கிறது.
மேலும், ரம்புட்டான் பழம் செரிமானத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் ஜெல் போன்று செயல்பட்டு, உணவை மெதுவாக செரிமானிக்க உதவுகிறது. இதனால் பசி உணர்வு குறைகிறது. மேலும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வும் ஏற்படுகிறது. இதுவே அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை கட்டுப்படுத்தும்.
மனித உடலில் ஏற்படும் சில நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த பழம் உதவுகிறது. குறிப்பாக ஆஸ்துமா, நீரிழிவு, கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் இப்பழத்தின் நன்மைகளால் கட்டுப்பாட்டில் வரக்கூடும். இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறது. கண் பார்வை, எலும்பு வளர்ச்சி மற்றும் தலைமுடி, தோல் ஆரோக்கியத்திலும் ரம்புட்டான் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி தேவையை வெறும் இரண்டு பழங்களால் நம்மால் பூர்த்தி செய்ய முடியும்.
இத்தனை நன்மைகள் உள்ளபோதும், எல்லோருக்கும் இதனை எப்போதும் சாப்பிடலாம் என்பதில்லை. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்சனை, கர்ப்பிணிகள் போன்றோர் மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், சிறிய குழந்தைகள் ரம்புட்டானை சாப்பிடும் போது, அதன் விதை தொண்டையில் சிக்க வாய்ப்பு இருப்பதால், பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
ஆகவே, பசுமையும் சத்தும் நிறைந்த ரம்புட்டான் பழம், சீரான உடல்நலத்துக்கே உரிய ஒரு இயற்கை படைப்பாகும். உரிய முறையில், சரியான அளவில் இதனை உணவில் சேர்த்தால், நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க இது ஒரு சிறந்த துணையாக அமையும்.