அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஊபர் (Uber) இந்திய சந்தையில் தனது வியாபாரத்தை வலுப்படுத்திக் கொண்டு வருகிறது. உலகளவில் கார் டாக்சி, ஆட்டோ மற்றும் பல்வேறு போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டாரா கோஸ்ரோஷாஹி, சமீபத்தில் இந்திய சந்தையைப் பற்றிய முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஊபரின் பிரதான போட்டியாளராக இருந்த ஓலா (Ola) நிறுவனத்தை விட தற்போது ராபிடோ (Rapido) தான் பெரிய சவாலாக மாறி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஓலா நிறுவனம் சமீப ஆண்டுகளில் மின்சார ஸ்கூட்டர், ஓட்டுநர் கமிஷன் மற்றும் சேவை தரம் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, ராபிடோ வலுவாக முன்னேறி வருகிறது என ஊபர் CEO தெரிவித்துள்ளார்.
ராபிடோ வளர்ச்சி: 2015-ல் தொடங்கப்பட்ட ராபிடோ, முதலில் இருசக்கர வாகன டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியது. குறுகிய காலத்திலேயே பெரும் வாடிக்கையாளர் ஆதரவை பெற்றது. பின்னர் ஆட்டோ மற்றும் கார் சேவைகளையும் விரிவாக்கியது. இந்நிறுவனத்தின் மிகப் பெரிய பலம் குறைந்த கமிஷன் கட்டணம் என்பதே.
ஊபர் மற்றும் ஓலா 18–22% கமிஷன் வசூலிக்கின்றன. ஆனால் ராபிடோ, ஓட்டுநர்களிடம் 0–5% கமிஷன் மட்டுமே வசூலிக்கிறது. இதனால், அதிகமான ஓட்டுநர்கள் ராபிடோவுடன் இணைந்து வருகின்றனர். தற்போது ராபிடோ தளத்தில் மட்டும் மாதம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் சேவையாற்றி வருகின்றனர். இதுவே அதன் வேகமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இந்தியாவின் ஆட்டோ மற்றும் டாக்சி சேவை துறையில் கடும் போட்டி நிலவிய நிலையில், ராபிடோவின் வேகமான முன்னேற்றம் ஓலாவுக்கு பெரிய சவாலாகவும், ஊபருக்கு புதிய போட்டியாகவும் மாறியுள்ளது.
Read more: கொய்யா உடல் நலத்திற்கு நல்லதுதான்.. ஆனால் இவர்களெல்லாம் தொடவே கூடாது..!!