The Hundred கிரிக்கெட் லீக் தொடரில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை ரஷீத் கான் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷீத் கான், ஐபிஎல், பிபிஎல், சிபிஎல், பிக்-பாஸ் உள்ளிட்ட அனைத்துவிதமான டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர், டி20 கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்தி அரிய சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது, பிரித்தானியாவில் தி ஹண்ட்ரட்(The Hundred) கிரிக்கெட் லீக் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான லண்டன் ஸ்பிரிட் அணியும்(London Spirit), ஓவல் இன்வின்சிபிள்ஸ்(Oval Invincibles) அணியும் மோதின.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் ஆடிய லண்டன் ஸ்பிரிட் அணி, 94 பந்துகளில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தது. 81 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஓவல் இன்வின்சிபிள்ஸ், 69 பந்துகளில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 20 பந்துகள் வீசி, 11 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்களை வீழ்த்திய ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி வீரர் ரஷீத் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இதுதவிர, இந்த போட்டியில் லண்டன் ஸ்பிரிட்ஸ் அணிக்கு எதிராக ரஷீத்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதையடுத்து அவர் கைப்பற்றிய மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 651ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற எஸ்ஏ20 போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் போட்டியில் ரஷீத்கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: 651 – ரஷீத் கான் (478 இன்னிங்ஸ்)
631 – டுவைன் பிராவோ (546 இன்னிங்ஸ்)
589 – சுனில் நரைன் (544 இன்னிங்ஸ்)
547 – இம்ரான் தாஹிர் (417 இன்னிங்ஸ்)
498 – ஷகிப் அல் ஹசன் (443 இன்னிங்ஸ்).
Readmore: அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல் நலக்குறைவு…!