இன்றைய காலத்தில் நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகக் கடன் மாறிவிட்டது. ஆனால், ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் தவணைத் தொகையைச் (EMI) செலுத்தத் தவறும்போது, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கொடுக்கும் நெருக்கடி, சம்பந்தப்பட்ட நபரை மரண விளிம்பு வரை தள்ளிவிடுகிறது.
தவணைத் தொகை தாமதமாகும் பட்சத்தில், ஆரம்பத்தில் தொலைபேசி வாயிலாகத் தொடங்கும் மிரட்டல்கள், பின்னர் நேரடித் தாக்குதலாக மாறுகின்றன. அதிகாலை அல்லது நள்ளிரவு என்று பாராமல் வரும் தொலைபேசி அழைப்புகள், பாதிக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்கின்றன. அதையும் கடந்து, உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார் முன்னிலையில் அநாகரீகமாகப் பேசுவது, வாசலில் நின்று கூச்சலிடுவது போன்ற செயல்கள் மூலம் ஒரு தனிமனிதனின் கௌரவத்தை சந்தியில் நிறுத்துகின்றனர். குடும்பத் தலைவியின் முன்னிலையிலும், பள்ளி செல்லும் குழந்தைகளின் முன்னிலையிலும் நடத்தப்படும் சம்பவங்கள் பலரை விபரீத முடிவுகளை நோக்கித் தள்ளுகின்றன.
வசூல் ஏஜெண்டுகளின் இந்த அராஜகப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அதிரடியான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடன் வசூல் செய்பவர்கள் இனி தங்களது இஷ்டத்திற்கு வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாது. குறிப்பாக, காலை 8 மணிக்கு முன்னதாகவும், இரவு 7 மணிக்கு பின்னதாகவும் கடன் கேட்டுக் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடன் பெற்றவரைத் தவிர, அவரது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது நண்பர்களையோ எக்காரணம் கொண்டும் தொடர்பு கொள்ளக் கூடாது.
வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டுமெனில், அவர்கள் எங்கே வரச் சொல்கிறார்களோ அங்கு மட்டுமே சென்று சந்திக்க வேண்டும். சந்திப்பின்போது கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மிரட்டல் தொனியிலோ அல்லது ஆபாசமான வார்த்தைகளிலோ பேசுவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் RBI எச்சரித்துள்ளது. வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள இந்த விதிமுறைகள், கடன் நெருக்கடியில் தவிக்கும் சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



