கடந்த ஜூன் 4ஆம் தேதி RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நிர்வாகமும், விராட் கோலியின் வீடியோ அழைப்பே முக்கிய காரணம் என்று கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் RCB அணி கைப்பற்றும் முதல் பட்டம் இது என்பதால் இக்கோப்பை பெங்களூரு ரசிகர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த வெற்றியை பெங்களூரு மைதானத்தில் கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 4ம் தேதி பெங்களூரு மைதானத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகமும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தான் காரணம் என்ற தனது அறிக்கையை மாநில அரசு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “வெற்றி கொண்டாட்டத்திற்காக காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதனைப் பொருட்படுத்தாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து ஏற்பாடு செய்தனர். குறிப்பாக நட்சத்திர வீரர் விராட் கோலி வீடியோ மூலமாக அழைப்பு விடுத்ததன் தொடர்ச்சியாக அதிகப்படியான ரசிகர்கள் அங்கு கூடினர். இதனால் தான் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டது.
நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் மைதானத்திற்குள் நுழைவதற்கு பாஸ் அவசியம் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்ததால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நுழைவு வாயிலை திறப்பதில் நிகழ்ந்த மோசமான திட்டமிடலும் விபத்துக்கு முக்கிய காரணம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக விராட் கோலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடக அரசின் அறிக்கையால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.



