பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு ஒன்று ஜெய்ப்பூரில் உள்ள சங்கனர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதே நேரத்தில் தன்னை உணர்ச்சி ரீதியாக மிரட்டி, கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றி பெறுவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
புகாரின்படி, பாதிக்கப்பட்ட பெண் கிரிக்கெட் வீரர் தயாளை 17 வயதில், ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியின் போது சந்தித்தார். கிரிக்கெட் குறித்து ஆலோசனை வழங்குவதாகக் கூறி, சீதாபுராவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்து அங்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், தான் மைனராக இருந்தபோது தொடங்கி இரண்டு வருடங்களாக இந்தப் பழக்கம் தொடர்ந்தது. இதன் காரணமாக, (POCSO) சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், காசியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததை அடுத்து, தயாள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 69 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது . முதலமைச்சரின் குறை தீர்க்கும் இணையதளம் (ஐஜிஆர்எஸ்) மூலம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்திராபுரம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
எஃப்.ஐ.ஆரை எதிர்த்து தயாள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த்த வர்மா மற்றும் அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, கைது செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
Read more: 3 மாதம் பழச்சாறு டயட்.. உடல் எடையை குறைக்க முயன்ற பிளஸ்-2 மாணவன் பலி..!! குமரியில் சோகம்..