திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக ஆர்சிபி பௌலர் யாஷ் தயாள் மீது அவரது முன்னாள் காதலில் புகார் அளித்திருந்த நிலையில், இருவருடனான இன்ஸ்டா சாட்டிங் ஸ்கீரின்ஷாட்டுகள் வைரலாகி வருகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் திருமண மோசடி புகார் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து, அம்மாநில முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கடந்த 5 வருடங்களாக, தன்னுடன் நன்றாக பழகிய யாஷ் தயாள், திருமண ஆசையை ஏற்படுத்தி, பல மோசடிகளை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், ‘‘கடந்த 5 வருடங்களாக நானும், யாஷ் தயாளும் நன்றாக பழகினோம். திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறி வாக்குறிது கொடுத்தார். மேலும், அவரது குடும்ப நபர்களிடம் என்னை ‘மருமகள்’ என அடையாளப்படுத்தினார். இதனை நம்பி அவரிடம் பல வழிகளில் ஏமாந்துவிட்டேன். பணத்தையும் இழந்தேன், என்னையையும் இழந்தேன். 5 வருடங்கள் நன்றாக பழகிய நிலையில், தற்போது அவர் என்னை ஏமாற்றிவிட்டார்’’
‘‘என்னுடன் அடிக்கடி சண்டை போட ஆரம்பித்தார். மேலும், திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகுதான், எனக்கு ஒரு உண்மை தெரிய வந்தது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்பது. இதுகுறித்து, ஜூன் 14ஆம் தேதி 181 என்ற பெண்கள் உதவி எண்ணிற்கு அழைத்தேன். இதுகுறித்து புகாரும் கொடுத்தேன். ஆனால், எனது புகாரை பதிவுசெய்ய மறுத்துவிட்டனர். இதனால்தான், தற்போது முதல்வர் தனிப்பிரிவில் புகார் கொடுத்துள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘என்னிடம், யாஷ் தயாள் பேசியதற்காக வாட்சப் சேட்கள் இருக்கிறது. வீடியோ காலில் பேசிய ஆதாரம் இருக்கிறது. இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இருக்கிறது. எனக்கு நியாயம் வேண்டும். இது எனக்கான நியாயம் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட அனைத்து பெண்ணிற்கும் நியாயம் கிடைக்கும் என்ற நீதிக்கான நியாயம். உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும்’’ என அவர் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அந்த பெண், இருவருடனான வீடியோ அழைப்புகள், கடந்த கால சாட்டிங் மற்றும் அவர்களின் உறவு எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டும் பழைய இன்ஸ்டாகிராம் பதிவுகளின் ஸ்கிரீன் ஷாட்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அவர் தான் உணர்ந்த வலியையும் துரோகத்தையும் வெளிப்படுத்தும் நோக்கில், இதனால் ஏற்பட்ட வடுக்கள் எவ்வளவு ஆழமானவை என்பதை மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாஷ் தயாள் பெண்களை “Use and throw” மனநிலையைக் கொண்டுள்ளார் என்று அந்தப் பெண் குற்றம் சாட்டினார் , மேலும் உண்மையான வெற்றி மற்றும் உறவுகளின் மதிப்புகளுக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பதை அவருக்குக் கற்பிக்குமாறு அவரது குடும்பத்தினருக்கும் வலியுறுத்தினார். இன்ஸ்டாகிராமில் நான்கு ஸ்கிரீன் ஷாட்களுடன் மூன்று பக்க செய்தியைப் பகிர்ந்து கொண்ட அவர், “நான் உன்னை விட்டுவிட முயற்சித்தேன், எல்லாவற்றையும் கடவுளின் கைகளில் விட்டுவிட்டேன்.
ஆனால் நீ என்னைப் போன்ற பெண்களைக் கையாளும் விதம் – ஒருவேளை இது அனைவருக்கும் ஒரு கண் திறக்கும். விசுவாசம் மற்றும் நேர்மை பற்றி உன் குடும்பம் உனக்கு ஏதாவது கற்றுக்கொடுக்கும் என்று நம்புகிறேன். இது வெற்றி அல்ல” என்ற தலைப்பில் எழுதினார். உங்களைப் போன்றவர்களை கர்மாவில்கூட விட முடியாது. ஏனென்றால் உங்களுக்கு கடவுள் பயம் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த இன்ஸ்டாகிராம் படங்கள் 2022 ஆம் ஆண்டு, யாஷ் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) குஜராத் டைட்டன்ஸ் அணி யில் விளையாடியபோது எடுக்கப்பட்டவை. அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலையும் பகிர்ந்து கொண்டார், அதில் யாஷ் “ஹாய், லவ்” என்று கூறி ஒரு கருத்தை பதிவிட்டார். அந்தப் பதிவு இப்போது சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதவிர யாஷ் தயாள் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அவரும் அதிர்ச்சியூட்டும் உரையாடல்களை வெளியிட்டுள்ளார். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு யாஷ் தயாள் பதிலளிக்காமல் மௌனமாகவே இருந்து வருகிறார். இது ஊகங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தபோதிலும், கிரிக்கெட் வீரரின் பல ரசிகர்கள் அந்தப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்து, புகழுக்காக இதைச் செய்ததாக குற்றம் சாட்டி வருகின்றனர்.