தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தில், திருமண பந்தத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்த ஒரு இளம்பெண், கள்ளக்காதல் விவகாரத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டம், திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி (28). இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த சுவாதி, துண்டிகல் என்ற இடத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷன் என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
ஏற்கனவே திருமணமானவரும், மனைவி மற்றும் குழந்தைகளை கொண்டவருமான கிஷனுக்கும், சுவாதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கிஷன், தான் வைத்திருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை வருமானம் முழுவதையும் எடுத்து சுவாதிக்காக செலவு செய்து வந்துள்ளார். இது கிஷனின் குடும்ப உறுப்பினர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இதனால், கள்ளக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சுவாதியை தீர்த்துக்கட்டவும் கிஷனின் சகோதரி மகனான ராஜேஷ் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று, சுவாதியும் அவரது இளைய மகனும் வீட்டில் இருந்தனர். அப்போது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த ராஜேஷ், தனது நண்பர் வம்சி என்பவருடன் சேர்ந்து, அந்த மகன் கண்முன்னேயே சுவாதியை மிகக் கொடூரமாகக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். இந்தக் கொடூரச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொலைக்குப் பிறகு, ராஜேஷ் மட்டும் தானாகவே போலீஸில் சரணடைந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய அவரது நண்பர் வம்சியை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனையே இந்தக் கொடூரக் கொலைக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



