வங்கக்கடலின் தென்–மேற்கு பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், விரைவில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. டிட்வா எனப் பெயரிடப்பட்ட இந்த புயல் தற்போது வடக்கு–வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று இலங்கை கடல்பகுதியை கடந்து, வடதமிழகம்–தென் ஆந்திரம் நோக்கி நகரும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
புயலின் நகர்வு தமிழகத்தை நோக்கி இருப்பதால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்யும். சில மாவட்டங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கனமழை பெற்றுள்ள தென் தமிழகத்தில், இந்த அமைப்பின் நேரடி தாக்கம் குறைவாக இருக்கும். இதனால் அப்பகுதிகளில் சிதறிய மழை மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, கீழ் காவிரி படுகை மாவட்டங்களில் இந்த புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
28 ஆம் தேதி நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
29 ஆம் தேதி திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் நல்லளவு மழை இருக்கும்.
30 ஆம் தேதி வடதமிழகமும் தென் தமிழகமும் பரவலாக மிதமான மழை பெறும். திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்பு உள்ளது.
டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் சிதறிய கனமழை பெய்யும்; சில இடங்களில் மிக கனமழையும் ஏற்படக்கூடும். புயல் நகர்வு மெதுவாக இருந்தால், மழை நாட்கள் மேலும் நீடிக்கலாம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Read more: ஜெயலலிதா ஆட்சி புனிதமான ஆட்சி இல்லையா? சட்டையில் இன்னும் ஜெ.படம் ஏன்? செங்கோட்டையன் விளக்கம்..!



