இந்து தர்மத்தில், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவ வினைகளை போக்கிக் கொள்வதற்கும், நற் பலன்களை அடைவதற்கும் தானங்களுக்கு சிறப்பான இடம் உண்டு. அனைவராலும் அனைத்து தானங்களையும் செய்ய இயலாது என்றாலும், அவரவர் சக்திக்கும், பொருளாதார நிலைக்கும் ஏற்ப செய்யும் சிறிய தானங்களும் கூட மகத்தான பலன்களை அளிக்க வல்லவை. தானங்களில் சிறந்தது எது? எதை தானம் செய்தால் நன்மை கிடைக்கும்? எதை தானம் செய்யவே கூடாது?
தானத்தில் சிறந்தது அன்னதானம் :
உயிர் வாழ்வதற்கு அடிப்படையான உணவுப் பொருட்களை தானம் செய்வது மிக சிறந்த பலனைத் தரும். அன்னதானம் செய்வதால் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தீரும் என்றும், பித்ருக்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார், அன்னதானம் செய்பவரை வெயில் வருத்தாது, வறுமை தீண்டாது, இறைவனின் துணை எப்போதும் நிலைத்து மனதில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நம் முன்னோர்கள், பிரதிபலனை எதிர்பார்க்காமல், அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்ற உண்மையான மனதோடு, அவர்களுக்குப் பயன்படக்கூடிய பொருட்களைக் கொடுக்கும் தானமே சிறந்த தானம் என்று வரையறுத்துள்ளனர். “நமக்குப் பயன்படவில்லை என்பதற்காகப் பயன்படுத்தாத பழைய பொருட்களை மற்றவர்களுக்கு தூக்கி கொடுப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. மாறாக அது பாவத்தையே சேர்க்கும்” என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவர் தானம் செய்யும்போது, அது கொடுப்பவர் மற்றும் பெறுபவர் ஆகிய இருவருக்கும் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும்.
நாம் அன்னதானம், வஸ்திரதானம் போன்ற எந்த வகையான தானங்களைச் செய்தாலும், அதனுடன் சில துளசி இலைகளையும் சேர்த்துத் தானம் வழங்கினால், அதன் பலன் இரட்டிப்பாகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. துளசியைத் தானமாகக் கொடுத்தால், தன வரவு அதிகரிக்கும், குடும்பத்தில் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இனி வரும் நாட்களில் தானம் செய்யும்போது முழு மனதோடு, மகிழ்ச்சியுடன் துளசி இலைகளையும் சேர்த்து வழங்கிப் புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ளலாம்.
சில முக்கிய தானங்கள் :
மஞ்சள் தானம்: வீட்டில் மங்கலம் உண்டாகும்.
வஸ்திர தானம் (ஆடை): சகல நோய்களும் நீங்கி நிவாரணம் கிடைக்கும்.
கோ தானம் (பசு): பித்ரு சாபம் நீங்குவதுடன், இல்லத்தில் உள்ள தோஷங்கள் விலகி, பலவித பூஜைகள் செய்த பலன் கிடைக்கும்.
தில (எள்) தானம்: செய்த பாவங்கள் விமோசனம் ஆகும்.
வெல்லம் தானம்: குடும்பத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும்.
நெய் தானம்: வீடுபேறு அடைய வழி கிடைக்கும்.
தண்ணீர் தானம்: மனசாந்தி நிலைக்கும்.
சொர்ண தானம் (தங்கம்): கோடி புண்ணியம் உண்டாகும்.
தானம் கொடுக்கக் கூடாத 3 பொருட்கள் :
கூர்மையான பொருட்கள்: கத்தி, கடப்பாரை, ஊசி போன்ற கூர்மையான ஆயுதங்களை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இது கெட்ட பலன்களை வீட்டிற்குள் கொண்டு வரும்.
பழைய உணவுகள்: நாம் பயன்படுத்தாத அல்லது பழையதாகிப்போன உணவுகளை தானமாக கொடுத்தால், வாழ்வில் வரவுக்கு மீறிய செலவுகளும் பொருளாதார சிக்கல்களும் ஏற்படும்.
துடைப்பம்: மகாலட்சுமி வாசம் செய்யக்கூடியதாக கருதப்படும் துடைப்பத்தை ஒருபோதும் யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. தவறுதலாக கொடுத்தால், வீட்டில் நிரந்தரமாக பணப் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.
Read More : இந்தியாவில் இதயநோய் மரணம் தான் அதிகம்..!! கொரோனாவுக்கு பின் அதிக மாரடைப்பு..!! உயிர் பிழைக்க இதுதான் வழி..!!