மியான்மரில் தொடரும் ஒடுக்குமுறையில் இருந்து தப்பி, பாதுகாப்பான புகலிடம் தேடி வரும் ரோஹிங்கியா அகதிகள், கடலில் எதிர்கொள்ளும் துயரங்கள் நிற்கவில்லை. சமீபத்தில், தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் இடையேயான கடல் எல்லைக்கு அருகில், ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த கோர விபத்தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், படகில் இருந்த மேலும் நூற்றுக்கணக்கானோர் கடலில் மாயமாகி இருக்கலாம் என்று மலேசிய கடலோரக் காவல் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மலேசியக் கடலோரக் காவல் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, சனிக்கிழமை அன்று ஒரு பெண்ணின் சடலமும், 10 அகதிகளும் உயிருடன் மீட்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை மேலும் 6 சடலங்களும், கூடுதலாக 3 பிழைத்தவர்களும் கண்டெடுக்கப்பட்டனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் திங்கட்கிழமைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதுடன், தேடும் பகுதியும் விரிவாக்கப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரொய்ட்டரஸ் செய்தி நிறுவனத்தின் தகவல் படி, அகதிகள் முதலில் மியான்மரில் ஒரு பெரிய கப்பலில் இருந்து, பின்னர் மலேசியக் கடற்படையினரின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக, தலா 100 பயணிகளை ஏற்றிச் செல்லும் 3 சிறிய படகுகளுக்கு மாற்றப்பட்டதாக தெரிகிறது. தற்போது இந்த விபத்து ஒரு படகில் மட்டுமே நிகழ்ந்துள்ள நிலையில், மற்ற இரண்டு சிறிய படகுகளின் நிலை என்னவென்று தெரியாமல் இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பான்மையான பௌத்தர்கள் வாழும் மியான்மரில், முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்கள் குடியுரிமை இல்லாமல், வெளிநாட்டவர்களை போலவே நடத்தப்பட்டு, தொடர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இந்த ஒடுக்குமுறை ஒருபுறம் இருக்க, மறுபுறம் வங்கதேசத்தில் உள்ள அகதிகள் முகாம்களின் மோசமான வாழ்வாதார நிலைமைகள் காரணமாக, இந்த மக்கள் உயிருக்கு பயந்து அபாயகரமான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர். இவர்களின் முக்கிய இலக்கு, பொதுவாக மலேசியாவை அடைவதுதான்.
ஐ.நா. அகதிகள் அமைப்பின் தகவல்கள், இந்த துயரத்தின் தீவிரத்தை உணர்த்துகின்றன. இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நவம்பர் வரை 5,100-க்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 600 பேர் உயிரிழந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ பதிவாகியுள்ளது. 2021-ல் நடந்த ஒரு விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மூழ்கி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. மியான்மரில் 2021-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு ஏற்பட்ட உள்நாட்டுப் போரும் இந்த அகதிகள் வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
Read More : நிலைமை ரொம்ப மாறிப்போச்சு..!! மருத்துவத் துறைக்கே சவால்..!! மக்களே இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!!



