தமிழ்நாட்டில் டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம், மதுபானங்களை முன்கூட்டியே கையிருப்பு வைப்பதில் மதுப்பிரியர்கள் காட்டும் ஆர்வம் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில், 77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு (ஜனவரி 26) மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஒரு நாள் இடைவெளியை சமாளிக்க, மதுப்பிரியர்கள் முந்தைய நாளே கடைகளில் அலைமோதியதால், தமிழகத்தின் மது விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ஜனவரி 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் 220 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, மனமகிழ் மன்றங்கள் (Clubs) மூலமாக மட்டும் 5 கோடியே 43 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சுமார் 839 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து முடிந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 200 கோடியை தாண்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என்றாலும், திங்கட்கிழமை விடுமுறை என்ற அறிவிப்பு ஞாயிற்றுக்கிழமை விற்பனையை இருமடங்காக மாற்றியுள்ளது. அரசு விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தாலும், மதுப்பிரியர்களின் இந்த முன்னெச்சரிக்கை கொள்முதல் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டிக் கொடுத்துள்ளது.
Read More : இனி பத்திரப் பதிவுக்கு இது அவசியம்..!! செக் வைத்த தமிழ்நாடு அரசு..!! ஒப்புதல் கொடுத்த ஜனாதிபதி..!!



