உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இயங்கி வந்த கல்குவாரி ஒன்றில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 16 தொழிலாளர்களில் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 நாட்களுக்கும் மேலாக நீடித்த மீட்புப் பணி, பாறை இடிபாடுகளை முழுமையாக அகற்ற முடியாததால் தோல்வியில் முடிந்து, கைவிடப்பட்டுள்ளது.
சோன்பத்ரா பகுதியில் செயல்பட்டு வந்த இந்தக் கல்குவாரியில், பூமிக்கு அடியில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்தன. வழக்கம்போல், கடந்த நவம்பர் 16ஆம் தேதி காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென குவாரியின் பாறைகள் மொத்தமாகச் சரிந்து விழுந்தன.
இந்த எதிர்பாராத விபத்தில், அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 4 நாட்களாக போராடி நடந்த மீட்புப் பணியில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 7 தொழிலாளர்களின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சிக்குத் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால், மிகப்பெரிய பாறை இடிபாடுகளை முழுமையாக அகற்ற முடியாமல் அதிகாரிகள் சிரமப்பட்டனர். இதன் காரணமாக, மீதமுள்ள 8 பேரின் உடல்களை மீட்கும் முயற்சி கைவிடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள எஞ்சிய 8 பேரும் உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதி செய்தனர்.



