இந்திய நிதி அமைப்பில் வெளிப்படைத்தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு, மற்றும் அமைப்புரீதியான பொறுப்புணர்வை மேம்படுத்தும் நோக்குடன், இந்திய ரிசர்வ் வங்கி தனது மிகப்பெரிய சீர்திருத்த முன்மொழிவுகளில் ஒன்றான வரைவு 238-ஐ வெளியிட்டுள்ளது. கடன் வழங்குதல், EMI விதிமுறைகள், கிரெடிட் கார்டு விதிமுறைகள் மற்றும் வங்கி சேமிப்பு நடைமுறைகள் எனப் பல முக்கிய அம்சங்களில் இது மாற்றங்களை கொண்டுவர உள்ளது.
நுகர்வோரைப் பாதுகாக்கும் புதிய விதிகள் :
பொதுமக்கள் கருத்துகளுக்காக நவம்பர் 10ஆம் தேதி வரை திறந்திருக்கும் இந்த வரைவு, ஜனவரி 2026 முதல் பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் முழுவதும் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கட்டமைப்பு, வங்கிகளின் நிதி நெறிமுறைகள், மோசடி தடுப்பு மற்றும் வாடிக்கையாளர் உரிமைகள் மீது வலுவான கண்காணிப்பை நிலைநிறுத்த முயற்சி செய்கிறது.
டிஜிட்டல் மோசடிக்கு ரூ.25,000 அபராதம் :
இந்த வரைவின் முக்கிய அம்சங்களில் ஒன்று, டிஜிட்டல் மோசடிக்கு ஆளாகும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை அதிகரிப்பதாகும். இணையவழி மோசடி நடந்த 3 நாட்களுக்குள் வங்கிகளுக்குத் தகவல் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும். அதேசமயம், டிஜிட்டல் மோசடி புகார்களில் உடனடியாக செயல்படத் தவறினால், சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ஒரு சம்பவத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. அதிகரித்து வரும் இணையவழி மோசடிகளுக்கு வங்கிகளை மிகவும் பொறுப்பாக்குவதே இதன் முக்கிய நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அனுமதி இல்லாத லாட்டரிகள் மற்றும் சிட் ஃபண்டுகள் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் உடனடியாக முடக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில், இத்தகைய திட்டங்கள் மோசடி மற்றும் பணமோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
லோன் விதிகளில் மிகப்பெரிய மாற்றம் :
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் புரிவதை எளிதாக்கும் வகையில், ரிசர்வ் வங்கி மேலும் 22 புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. இதில், வங்கி அமைப்பு ஒரு தனி நிறுவனத்திற்கு வழங்கும் ரூ.10,000 கோடி கடன் உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நிறுவனம் தனது கடன் தேவைகளுக்காக ஒரே கையெழுத்தில் ஒரு வங்கியிடம் இருந்து ரூ.10,000 கோடிக்கு மேல் கடன் பெற முடியும். இருப்பினும், ஒரு வங்கியின் மொத்த கடனில், ஒரு தனி நிறுவனத்திற்கு அதன் நிகர மதிப்பில் 20 சதவீதமும், ஒரு குழுமத்திற்கு 25 சதவீதமும் மட்டுமே வழங்க முடியும் என்ற கட்டுப்பாடு தொடரும்.
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி வழங்கும் நிதி அல்லாத வங்கிகள் (NBFCs) மீதான இடர் எடைகளைக் குறைப்பதன் மூலம், உள்கட்டமைப்பு நிதிச் செலவைக் குறைப்பதற்கும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. பங்கு முதலீடுகள், IPO-க்கள் உட்பட முதலீடு செய்வதற்காகக் கடன் வாங்குபவர்களுக்கான கடன் வரம்புகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த முக்கிய மாற்றங்கள் அனைத்தும் ஜனவரி 2026 முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



