அமெரிக்கா செல்லும் விமானத்தில் உள்ள ஒரு பெண்ணின் செல்போனில் வந்த “RIP” எனும் குறுஞ்செய்தி, மற்றொரு பெண்ணுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விமானத்தை அவசரமாக தரையிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயான் விமான நிலையத்திலிருந்து டல்லாஸ் நகரை நோக்கி புறப்பட்டு சென்ற American Airlines விமானத்தில் 193 பேர் பயணம் செய்தனர். பயணத்தின் போது, இரண்டு பெண்கள் அருகருகே அமர்ந்திருந்தனர். அந்த நேரத்தில், ஒரு பெண் எதிர்பாராதவிதமாக மற்றொரு பெண்ணின் செல்போனை எட்டிப் பார்த்தபோது, அதில் “RIP” (Rest In Peace) என்ற மெசேஜ் தெரிந்ததாக கூறப்படுகிறது.
இதை வெடிகுண்டு மிரட்டலாக தவறாக உணர்ந்த அந்த பெண், உடனடியாக விமான பணிப்பெண்ணிடம் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து, விமானக்குழு கேப்டனைத் தொடர்புகொண்டு தகவலை தெரிவித்தனர். பரபரப்பான சூழலில், விமானம் மீண்டும் சான் ஜுயானுக்கு அருகிலுள்ள இஸ்லா வெர்டே விமான நிலையம்க்கு திருப்பி, அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த 193 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் பாதுகாப்புத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், “RIP” குறுஞ்செய்தி வெறும் உரையாடலுக்காக அனுப்பப்பட்டதென்றும், இதில் எந்தவிதமான மிரட்டலும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளதுடன், தவறான புகாரால் விமான பயணிகளை அச்சுறுத்திய அந்த பெண்ணின் செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “பொய்யான தகவலால் 193 பயணிகள் உயிர் அச்சத்தில் இருந்தனர். அந்த பெண்ணுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என ஒரு பயணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read more: தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? பரவிய தகவல்.. TN Fact check unit விளக்கம்!