திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த கர்லப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவர் பத்திரப்பதிவு எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில், பழனி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
கொள்ளையர்கள் வீட்டில் புகுந்து அங்கிருந்த சுமார் 100 சவரன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், சில பட்டுப் புடவைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பழனி அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, வீட்டில் மதுபாட்டில்கள் கிடந்ததை கண்டு போலீசார் மேலும் அதிர்ச்சியடைந்தனர். கொள்ளையர்கள் துணிச்சலுடன் பணம் மற்றும் நகைகளை திருடிய பிறகு, அதே வீட்டிலேயே அமர்ந்து மது அருந்திவிட்டு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : ஐப்பசி பௌர்ணமி..!! முருகப்பெருமானுக்கு இதை படைத்து வழிபடுங்க..!! வீட்டில் செல்வம் பெருகும்..!!



