தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் ரோபோ சங்கரின் திடீர் மறைவு, திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்குப் பின்னால், சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகளும், விமர்சனங்களும் பரவின. ரோபோ சங்கரின் உடல்நலக் குறைவுக்கு குடிப்பழக்கமே முக்கிய காரணம் என்று பரப்பப்பட்ட கருத்துகளுக்கு அவரது நெருங்கிய நண்பரும், கலைஞருமான நாஞ்சில் விஜயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
“குடிப்பழக்கம் ஒரு காரணம் தான். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. மேடை நாடகக் கலைஞராக இருந்தபோது அவர் உடம்பில் பூசிய பெயிண்ட், ஓய்வு இல்லாத உழைப்பு என அனைத்தும் சேர்ந்துதான் அவரது உடல்நலப் பாதிப்புக்கு காரணமாக அமைந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
மன அழுத்தம் : கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்த ரோபோ சங்கர், குடிப்பழக்கத்தில் இருந்து விலகிவந்த பின்பும், எந்த தொலைக்காட்சி சேனல்களும் அவரைச் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கவில்லை. வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், ரோபோ சங்கர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மட்டும் மாதம் ரூ.லட்சம் ரூபாய் இ.எம்.ஐ செலுத்த வேண்டிய கட்டாயச் சூழலில், அவர் ஓயாமல் உழைக்க வேண்டியிருந்தது.
சிகிச்சைக்காக தாலியை கொடுத்த மனைவி : ரோபோ சங்கருக்கு முதல் முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவானது. அவ்வளவு பணத்தை செலவு செய்துதான் அவரது மனைவி பிரியங்கா அவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மருத்துவச் செலவுக்காக பிரியங்கா அணிந்திருந்த தாலி உட்பட அத்தனை நகைகளையும் கழற்றிக் கொடுத்தார்.
அதேபோல, மருமகன் கார்த்திக்கும் தனது கையில் அணிந்திருந்த செயின், மோதிரம் என அனைத்தையும் கழற்றிக் கொடுத்துதான் மருத்துவச் செலவு செய்யப்பட்டது. இந்தத் துயரங்களை நான் அருகில் இருந்து பார்த்தேன்” என்று நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார்.
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா மீது, வருமானம் இல்லாததால் விளம்பரப் பதிவுகளை செய்து வருகிறார் என பலரும் விமர்சனம் செய்தனர். ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம் கிடையாது. ரோபோ சங்கர் குடும்பம் மிகப்பெரிய கடன் சுமையில் இருக்கிறது என்றார்.
மேலும், ரோபோ சங்கரின் மனைவி இறுதி ஊர்வலத்தில் ஆடியதை விமர்சிப்பவர்களுக்கு, “அந்த ஆட்டம் வேதனையின் உச்சத்தில் ஆடியது. தனது கணவருக்குப் பிடித்ததை அவர் கடைசியாக செய்தார். இதை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்” என்றும் நாஞ்சில் விஜயன் கூறியுள்ளார்.



