பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் ரோபோ சங்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கூ டூப் குக்கூ’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட இவர், அண்மையில்தான் எலிமினேட் செய்யப்பட்டார்.
இவரது எலிமினேஷன் நிகழ்ச்சி மிகவும் நகைச்சுவையாக இருந்ததால், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்த சூழலில் தான், தற்போது மீண்டும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்ன விதமான உடல்நலக் குறைவு என்பது குறித்த விரிவான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ரோபோ ஷங்கர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
ரோபோ சங்கரின் உடல்நலம் குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், ரத்த அழுத்தம் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். தற்போது அவர் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.