விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான நடிகர் ரோபோ சங்கர், தனது மிமிக்ரி மற்றும் ஸ்டாண்ட்-அப் காமெடிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பல ரியாலிட்டி ஷோக்களில் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களை போல மிமிக்ரி செய்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். 1997ஆம் ஆண்டு ‘தர்ம சக்கரம்’ படத்தில் அறிமுகமானாலும், நீண்ட இடைவெளிக்குப் பின் ‘தீபாவளி’ படத்தில் ரவி மோகனின் நண்பராக நடித்து கவனம் பெற்றார்.
பின்னர், மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விஸ்வாசம் போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். ரோபோ சங்கர், சிறுவயது முதலே கமல்ஹாசனின் தீவிர ரசிகர். கமல் நடித்த ஒவ்வொரு படத்தையும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தது அவரது வாழ்நாள் பழக்கமாக இருந்தது.
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தபோதும், கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு மட்டும் அவருக்கு கடைசிவரை கிடைக்காமலேயே போனது. ரோபோ சங்கரின் உடல்நலக்குறைவு குறித்து கமல்ஹாசன் அடிக்கடி விசாரித்து வந்திருக்கிறார். மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்ற போதும்கூட தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ரோபோ சங்கரின் பேரன் பிறந்தபோதும்கூட, இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியினர் குழந்தையுடன் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தைக்கு ‘நட்சத்திரன்’ என்று கமல்ஹாசன் பெயர் வைத்தார்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு முதல் அஞ்சலியைத் தெரிவித்தவர் கமல்ஹாசன்தான். தனது பதிவில், “ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன். ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே” என்று உருக்கமாக எழுதியிருந்தார்.



