திரைப்படங்களில் இடம்பெறும் அந்தரங்க காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளின் பின்னணியில் உள்ள எதார்த்தமான உண்மைகளை நடிகை தமன்னா பாட்டியா சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
திரையில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது, நிஜமாகவே அந்த உணர்வு ஏற்படுமா? என்ற நேரடியான கேள்விக்குத் தமன்னா மிகவும் நிதானமாகவும், தைரியமாகவும் பதிலளித்தார். “திரையில் பார்க்கும்போது அந்தக் காட்சிகள் மிகவும் ரொமான்டிக்காக தோன்றலாம். ஆனால், உண்மையில் அந்தச் சூழலில் நிஜமான உணர்வுகள் தோன்ற வாய்ப்பே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், லைட்மேன் என நூற்றுக்கணக்கானோர் நம்மைச் சுற்றி இருக்கும்போது, அங்கு எப்படி தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடமிருக்கும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இத்தகைய காட்சிகளில் நடிக்கும்போது நடிகைகளை விட நடிகர்களே அதிக சங்கடத்திற்கு உள்ளாவதாக தமன்னா கூறியுள்ளார். பல நேரங்களில் என்னுடன் நடிக்கும் ஹீரோக்கள் மிகவும் பயத்துடனே இருப்பார்கள். தெரியாமல் கூட எங்கே அத்துமீறிவிடுவோமோ அல்லது நடிகைகள் தவறாக நினைத்து புகார் அளித்துவிடுவார்களோ என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கும். புதிய நடிகர்கள் முதல் அனுபவம் வாய்ந்தவர்கள் வரை பலரும் இந்தச் சங்கடத்தைச் சந்திப்பதாக என்னிடம் கூறியிருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
தன்னைப் பொறுத்தவரை, ஒரு காட்சி தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறிய தமன்னா, இறுதியாக ஒரு நகைச்சுவையான கருத்தையும் முன்வைத்தார். “ஒருவேளை அபூர்வமாக அப்படி ஏதேனும் உணர்வு தோன்றினாலும், நம்மைச் சுற்றி கேமராக்களுடன் நிற்கும் கூட்டத்தைப் பார்த்த அடுத்த நொடியே அந்த உணர்வு காணாமல் போய்விடும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.



