கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டு திமுக அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது.
இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் முன்னதாக தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது வரை அதிகாரப்பூர்வமாக பணிகள் எதுவும் தொடங்கவில்லை என கூறப்படுகிறது.
அதாவது, ஜூன் 4ஆம் தேதியே உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இ – சேவை மையங்களுக்கு இதுதொடர்பாக எந்தவொரு உத்தரவுமே வரவில்லையாம். அதேபோல் விண்ணப்பம் தொடர்பான அறிவிப்பும் எதுவும் வரவில்லையாம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது, புதிய விண்ணப்ப மாடல் தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
ரூ.1,000 பெற புதிய விதிகள் என்னென்ன..?
* குடும்பத்தில் நீங்கள் தான் தலைவியாக இருக்க வேண்டும். அதாவது, ரேஷன் அட்டையில் தலைவன் என்ற லிஸ்ட்டில் வருபவர்களின் மனைவியாக இருக்க வேண்டும்.
* கணவர்கள் இல்லாத வீட்டில் மூத்த பெண்ணுக்கு ரூ.1,000 பணம் வழங்கப்படும்.
* உங்களின் வங்கி கணக்கு ஆதாருடனும், செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்திற்கு மேல் வருமானம் பெற்றால், இத்திட்டத்தின் பலன் உங்களுக்கு கிடையாது.
* வருமான வரி செலுத்துபவராக இருந்தாலும், உங்களுக்கு பணம் கிடைக்காது. ஒரு ரேஷன் கார்டில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டுமே பணம் கிடைக்கும்.
* ஒரே வீட்டில் இரண்டு ரேஷன் இருந்தால் அதில் ஒரு ரேஷன் கார்டு நீக்கப்பட்டு, பணம் வழங்கப்படாது.
* புதிதாக திருமணமாகி ரேஷன் கார்டு பெற்றவர்கள், அரசு ஊழியராக இல்லாத பட்சத்தில் அவருக்கு ரூ.1,000 வழங்கப்படும்.
மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்..?
மாதந்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தகுதியுள்ள புதிய மகளிருக்கு ஜூன் மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இம்முறை தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.