திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், ஆட்சிக்கு வந்தப் பிறகு 2023 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, முதலில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், சுமார் 1.15 கோடி பெண்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத குடும்பங்கள் அரசின் மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் மகளிர் உரிமைத் தொகை கோரி, புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, புதிதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில் வருவாய் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களில், வருமான வரி செலுத்தும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து, மற்ற தகுதியான குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்க, தமிழக நிதித்துறை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், புதிய பயனாளிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை வரும் டிசம்பர் மாதத்தில் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : FLASH | உலக சந்தையில் என்ன நடக்கிறது..? மீண்டும் சரிந்த தங்கத்தின் விலை..!! சவரனுக்கு ரூ.6,400 குறைவு..!!



