தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் யுத்தம் இப்போதே தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக, மகளிர் உரிமைத் தொகை மற்றும் கோடைக்கால சிறப்பு நிதி என ஒரே தவணையாக ரூ.5,000 வழங்கி மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றுள்ள நிலையில், அதற்குப் போட்டியாக மத்திய பாஜக அரசு ஒரு பிரம்மாண்டமான நிதித் திட்டத்தை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வாக்காளர்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ரூ.12,000 வரை வரவு வைக்க டெல்லி மேலிடம் அதிரடித் திட்டம் வகுத்து வருகிறது.
சமீபத்தில் திருச்சிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நடத்திய ரகசிய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரம் முக்கிய இடம்பிடித்ததாக தெரிகிறது. தமிழக அரசின் ரூ.5,000 திட்டம் பெண்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை முறியடிக்க வேண்டுமானால், அதைவிடப் பெரிய அளவிலான ஒரு நிதி உதவியை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க வேண்டும் என மாநில நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதைக் கவனத்தில் கொண்ட அமித்ஷா, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு ‘மெகா’ தொகுப்பை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் கேஸ் மானியம், உர மானியம் மற்றும் பிரதமரின் கிசான் சம்மன் நிதி (PM-Kisan) போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிலுவைத் தொகைகளை ஒருங்கிணைத்து, அவற்றை மொத்தமாக ரூ.12,000-ஆக பயனாளிகளுக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நேரடிப் பலன் பரிமாற்றம் (DBT) மூலம் இந்தத் தொகை மக்களின் வங்கிக் கணக்கிற்குச் செல்லும்போது, அது ஆளுங்கட்சியின் திட்டத்தை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக நம்புகிறது. இது வெறும் தேர்தல் கால அறிவிப்பாக மட்டுமன்றி, தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தும் ஒரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ஆக பார்க்கப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைப்பதற்கும், அதிமுக மற்றும் திமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு பலமான சவாலை அளிப்பதற்கும் இத்தகைய நிதி சார்ந்த அறிவிப்புகள் பாஜகவுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



