பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “அன்பு கரங்கள்” என்ற சிறப்பு திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். பள்ளிப் படிப்பை முடித்தவுடன், அவர்களுக்கு கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
அன்பு கரங்கள் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற, பின்வரும் தகுதியுடைய குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
* இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகள்.
* ஒரு பெற்றோர் இறந்த நிலையில், மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்ற குழந்தைகள்.
* ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் இருந்தால்.
* ஒரு பெற்றோர் இறந்து, மற்றொருவர் சிறையில் இருந்தால்.
* ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தால்.
விண்ணப்பிப்பது எப்படி..?
அன்பு கரங்கள் திட்டத்தில் பயன்பெற விரும்பும் குழந்தைகள், தங்கள் உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தால், அவர்களின் சார்பாக விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க குடும்ப அட்டையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல், குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன் உங்கள் பகுதியில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.