முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5,000 ரொக்கப் பரிசு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த ரொக்கப் பரிசோடு சேர்த்து, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ஏலக்காய், முந்திரிப் பருப்பு, வேட்டி மற்றும் சேலை ஆகியவையும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஏறக்குறைய ரூ.10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, முதலமைச்சர் தீபாவளி பண்டிகையின் போது வெளியிடலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் யாருக்கு கிடைக்கும்..?
பொங்கல் பரிசுத் தொகுப்பு, அரிசி மற்றும் சர்க்கரை ரேஷன் அட்டை வைத்திருப்போர் அனைவருக்கும் கிடைக்கும். இருப்பினும், அடையாளத்திற்காக மட்டுமே அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட வாய்ப்பில்லை. கடந்த காலங்களில் பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி, மத்திய – மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், மற்றும் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டு ரொக்கப் பரிசு வழங்கப்படாமல், மற்றவர்களுக்கு மட்டும் வழங்கப்படலாம்.
கடந்த ஆண்டு, நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அரசு ரொக்கப் பரிசு வழங்குவதை தவிர்த்தது, எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை உருவாக்கியது. இந்த நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ரொக்கப் பரிசுடன் கூடிய இந்த அறிவிப்பு வெளியாவது, வாக்குகளை கவரும் ஒரு அரசியல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டம் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.