இன்றைய காலத்தில், ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது மட்டும் முக்கியமல்ல; சம்பாதித்ததை எவ்வளவு திறமையாகச் சேமித்து செலவுகளை கட்டுப்படுத்துகிறோம் என்பதுதான் எதிர்காலத்தை உறுதிசெய்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், வாழ்க்கைத் தேவைகள் ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க சிறு வயதிலேயே சேமிக்கத் தொடங்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதை முன்னிட்டு, அஞ்சல் அலுவலகம் “பால் ஜீவன் பீமா யோஜனா” எனும் சிறப்பு சேமிப்பு திட்டத்தை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், மிகவும் குறைந்த முதலீட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெரிய அளவு சேமிப்பை உருவாக்கி தர முடியும். தினசரி ரூ.6 முதல் ரூ.18 வரை முதலீடு செய்யும் வசதி இதில் உள்ளது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான குழந்தைகளின் வயது 5 முதல் 20 வரை இருக்க வேண்டும். இருப்பினும், சேமிப்பு பெற்றோரின் பெயரில் அல்லாமல், குழந்தைகளின் பெயரில் தொடங்கப்பட வேண்டும். மேலும், பெற்றோரின் வயது 45 ஆண்டுகளைத் தாண்டக் கூடாது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் வரை பயனடையலாம். உதாரணமாக, ஒருவர் தினசரி ரூ.6 சேமித்தால், முதிர்வுக் காலத்தில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை பெற முடியும். ரூ.18 சேமித்தால், அது ரூ.3 லட்சமாக அதிகரிக்கும். இரண்டு குழந்தைகளின் பெயரில் தலா ரூ.18 (மொத்தம் ரூ.36) சேமித்தால், இறுதியில் சுமார் ரூ.6 லட்சம் வருமானம் கிடைக்கும்.
மேலும், பாலிசி எடுக்கப்பட்ட பிறகு, அதன் காலம் முடிவதற்குள் பெற்றோரில் யாராவது உயிரிழந்தால், மீதமுள்ள பிரீமியம் தொகை தள்ளுபடி செய்யப்படும். அதாவது, அந்தக் காலத்தில் இனி கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், பாலிசி காலம் முடிந்தபின், முழுத் தொகையும் குழந்தைக்கு வழங்கப்படும். இதன் மூலம், குழந்தையின் எதிர்காலம் நிதி ரீதியாக பாதுகாப்படையும்.
இந்தத் திட்டத்தில் கடன் வசதி கிடையாது. இருப்பினும், குறைந்தது 5 ஆண்டுகள் கழித்து பாலிசியை நிறுத்த விரும்பினால், அதை ஒப்படைக்கலாம். ஒவ்வொரு ரூ.1,000 காப்பீட்டுத் தொகைக்கும் ஆண்டுதோறும் ரூ.48 போனஸ் வழங்கப்படுவது இந்தத் திட்டத்தின் மேலும் ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகும்.
இந்தத் திட்டத்தில் சேர விரும்புவோர் அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ளலாம். தேவையான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, குழந்தையின் விவரங்கள், பெற்றோரின் விவரங்கள், அடையாளம் மற்றும் முகவரிச் சான்றிதழ்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து எளிதாக கணக்கைத் தொடங்க முடியும்.