தமிழ்நாட்டில் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்ற புதிய விதிமுறை, நாளை (டிசம்பர் 1, 2025) முதல் அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த முக்கிய மாற்றத்தை அமல்படுத்துமாறு போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
புதிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கிய பிறகு, அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்ய நேரில் கொண்டு செல்ல வேண்டிய நடைமுறை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இந்த நடைமுறையால், பொதுமக்களுக்கு கால விரயம் ஏற்படுவதுடன், குறிப்பாக இரு சக்கர வாகனங்களை நேரில் கொண்டு செல்லும்போது சில இடங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இந்தப் பழைய நடைமுறையை எளிதாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 150 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் சுமார் 8,000 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்படும் நிலையில், இதில் 3,000 முதல் 4,000 வாகனங்கள் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்கள் (இதில் 70% இரு சக்கர வாகனங்கள்) ஆகும்.
மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்ட திருத்தத்தின்படி, “சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை உரிமையாளர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்குக் கொண்டு வர தேவையில்லை” என்று சட்டம் திருத்தப்பட்டது. இருப்பினும், இந்தத் திருத்தம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இதையடுத்து, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மோட்டார் வாகனச் சட்டத்தின்படி சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் கொண்டு வருவதில் இருந்து விளக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த புதிய விதிமுறையை நாளை (டிசம்பர் 1, 2025) முதல் அமல்படுத்த வேண்டும் என அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் தமிழகப் போக்குவரத்துத் துறை ஆணையர் கஜலட்சுமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களை இனி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து, பதிவு செய்து கொள்ளலாம். இருப்பினும், வணிகப் பயன்பாட்டிற்கான (Commercial) வாகனங்களை மட்டும் கட்டாயம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் கொண்டு வந்து பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் சிரமத்தைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : கார்த்திகை பௌர்ணமி கிரிவலம் எப்போது செல்ல வேண்டும்..? தேதி, நேரம், பலன்கள் இதோ..!!



