சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜூலை 16) மாலை நடை திறக்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு, தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் பிரம்மதத்தன் ராஜீவரு தலைமையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறப்பை நடத்தவுள்ளார்.
இதற்கு முன், கடந்த ஜூலை 11-ம் தேதி நவகிரக பிரதிஷ்டை வழிபாட்டுக்காக நடை திறக்கப்பட்டதையடுத்து, 12-ம் தேதி பலவிதமான வழிபாடுகள் நடைபெற்றன. 13-ம் தேதி, நவகிரக கோயிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின், அன்று இரவு 10 மணிக்கு நடை மூடப்பட்டது.
இந்நிலையில், இன்று நடை திறக்கப்பட்ட பின் நாளை அதிகாலையில் இருந்து தொடர் வழிபாடுகள் நடைபெறவுள்ளன. ஜூலை 21-ம் தேதி இரவு 10 மணி வரை தொடரும். நிறைபுத்தரி பூஜைக்காக ஜூலை 29-ம் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டு, ஒரு நாள் வழிபாடு நடத்தப்பட்ட பின் ஜூலை 30-ம் தேதி இரவில் நடை மூடப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இன்று சிறப்பு பூஜை எதுவும் நடைபெறாது. கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மட்டும் நடைபெறும். தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பக்தர்கள் குடை, மழைக்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் வருமாறு தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.
Read more: சூப்பர் வாய்ப்பு..! TNPSC – Group II & IIA முதல்நிலை போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…!