கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019இல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதைச் செப்பனிட்டபின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது.
இந்த விவகாரம், பக்தர்கள் மற்றும் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கத்தின் எடை குறைந்ததில் உள்ள முறைகேடுகள் குறித்து முழுமையாக விசாரிக்க, நீதிபதிகள் ராஜா விஜயராகவன்.வி மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, 2019இல் சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மீதான தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகளை தாமிரத் தகடுகளாக தவறாகப் பதிவு செய்ததாக, அப்போதைய நிர்வாக அதிகாரி பி.முராரி பாபுவை திருவிதாங்கூர் தேவசம் போர்டு இடைநீக்கம் செய்தது. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இடைத்தரகராகச் செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி மற்றும் தேவசம்போர்டு துணை ஆணையர் முராரி பாபு, திருவிதாங்கூர் தேவசம் வாரிய செயலர் ஜெயஸ்ரீ, செயல் அதிகாரி சதீஷ், நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ்.பைஜு உள்ளிட்ட 9 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தேவசம் போர்டு அதிகாரிகளே இந்த கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் தகடுகள் மாயமான வழக்கில், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் போத்தியும், முராரி பாபுவும் சிறப்பு புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். இதேபோல், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். துவாரபாலகர் சிலைகள் தங்க முலாம் பூசப்பட்டவை என்பதை மறைத்து, அதற்குப் பதிலாக கோயிலின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் அவற்றை செப்புத் தாள்களாகப் பதிவு செய்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சபரிமலை தங்கம் மாயமான வழக்கில் முன்னாள் திருவாபரணம் ஆணையர் கே.எஸ். பைஜு என்பவரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) கீழ் உள்ள கோயிலின் அனைத்து மதிப்புமிக்க பொருட்களின் அதிகாரப்பூர்வ பாதுகாவலர் பைஜு ஆவார். வெள்ளிக்கிழமை, நீதிமன்றம் அவரை நவம்பர் 21 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில் ஏழாவது குற்றவாளியான பைஜு, அப்போது பொறுப்பான அதிகாரியாக இருந்தார், மேலும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்மார்ட் கிரியேஷன்ஸுக்கு மறு முலாம் பூசுவதற்காக அனுப்பப்பட்ட தங்கத் தகடுகளின் பாதுகாவலராகப் பணியாற்றினார். தங்கத் தகடுகள் கோயிலிலிருந்து சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நாளில் அவர் விடுப்பில் இருந்தார் என்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது,
பைஜுவின் பதவிக் காலத்தில் ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். துவாரபாலக சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட தாள்கள் மற்றும் ஸ்ரீகோவில் கட்டிலா பலகைகளை அவர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் செப்புத் தாள்களாகப் பதிவு செய்தார். இந்த ஆவணக் கையாளுதலைப் பயன்படுத்தி, முக்கிய குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போட்டி, கோயிலின் அசல் தங்கத்தை மாற்றி அதை கடத்திச் சென்றார் என்று கூறப்படுகிறது.
சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, பைஜு கோவிலில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட பொருட்களை அகற்றும் போது கையொப்பமிடவில்லை, மேலும் கோவிலில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டபோது அவர் அங்கு இல்லை. சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக விசாரணை நிறுவனங்கள் சந்தேகிக்கின்றன.
இந்த வழக்கில் மேலும் இரண்டு முன்னாள் அதிகாரிகளான முராரி பாபு மற்றும் சுதீஷ் குமார் ஆகியோரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ளனர். முன்னாள் தேவஸ்தானத் தலைவர் என். வாசுவும் விரைவில் விசாரிக்கப்படுவார் என்று தெரிகிறது.



