தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போது, கைதான வழக்கறிஞர்களை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. எனவே தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது..
இதையடுத்து காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.. இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தனர்.. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் நேற்று நள்ளிரவில் சென்னையில் போராடிய தூய்மை பணியாளர்கள், ஆதரவாளர்கள் என 951 பேர் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த போது கைதான வழக்கறிஞர்களை மீட்டுத்தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யபட்டது.. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் காவல்துறைக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினர்.. வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்களை கைது செய்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்..
நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தில் இருந்து கலைந்து செல்ல மறுத்த 6 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.. அரசுப் பேருந்து சேதம் உள்ளிட்ட காரணங்களுக்காக தான் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.. என்று காவல்துறை தரப்பு தெரிவித்தது.
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாட்டில் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை உடனே விடுவிக்கவும் உத்தரவிட்டனர்..