கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது பனி படர்ந்த வீதிகளும், பரிசுப் பொருட்களைச் சுமந்து வரும் சாண்டா கிளாஸும் (தாத்தா), அவர் அணிந்திருக்கும் அந்த சிவப்பு நிற அங்கிகளும்தான். உலகம் முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்ட தயாராகி வரும் வேளையில், சாண்டா கிளாஸின் உருவத்திற்கும், அந்த சிவப்பு நிறத்திற்கும் பின்னால் இருக்கும் சுவாரசியமான வணிகப் பின்னணி குறித்து ஒரு சிறப்புத் தொகுப்பைப் பார்க்கலாம்.
ஏசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிறுத்தி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டாலும், குழந்தைகளின் நாயகனாக சாண்டா கிளாஸ் உருவெடுத்த விதம் அலாதியானது. ஆரம்ப காலத்தில், அதாவது 1800-களில் சாண்டாவுக்கு என்று நிலையான ஒரு உருவமோ அல்லது உடையோ கிடையாது. ஓவியர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப அவரைச் சில நேரங்களில் குள்ளமாகவும், சில நேரங்களில் அச்சுறுத்தும் தோற்றத்திலும் வரைந்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த உடைகள் பச்சை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்களில் இருந்தன. கருப்பு வெள்ளை ஓவியங்களே அதிகம் புழக்கத்தில் இருந்தன. 1870-களுக்குப் பிறகுதான் அவருக்குச் சிவப்பு நிற அங்கிகளும், கருப்பு நிற பெல்ட்டும் மெல்ல அறிமுகமாக தொடங்கின.
இருப்பினும், இன்று நாம் பார்க்கும் அந்த முழுமையான ‘சிவப்பு சாண்டா’ உருவத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய வணிகத் தந்திரம் ஒளிந்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கோகோ கோலா (Coca-Cola) நிறுவனம் தனது குளிர்கால விற்பனையை அதிகரிக்க ஒரு மாஸ்டர் பிளானைத் தீட்டியது. பொதுவாக வெயில் காலத்தில் மட்டுமே அதிகம் விற்பனையாகும் கோகோ கோலாவை, குளிர் காலத்திலும் மக்கள் அருந்த வேண்டும் என்பதற்காக சாண்டா கிளாஸ் கதாபாத்திரத்தை கையில் எடுத்தது அந்த நிறுவனம். சாண்டா கிளாஸ் கோகோ கோலா பாட்டிலை வைத்திருப்பது போன்ற விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டன.
கோகோ கோலா நிறுவனத்தின் பிராண்ட் நிறமான சிவப்பும், சாண்டா கிளாஸின் உடையும் ஒன்றோடு ஒன்று இணைந்துவிட்டதால், இந்த விளம்பர யுத்தி உலகளவில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அந்த 10 ஆண்டுகளில் சாண்டா கிளாஸ் என்றாலே சிவப்பு நிறம்தான் என்கிற பிம்பம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது. இது குறித்து இத்தாலியைச் சேர்ந்த பிஷப் அன்டோனியோ ஸ்டாக்லியானோ ஒருமுறை பேசுகையில், “சாண்டா கிளாஸ் அணிந்திருக்கும் சிவப்பு நிறம் என்பது விளம்பர நோக்கங்களுக்காக கோகோ கோலாவால் பிரபலப்படுத்தப்பட்டது” என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
சாண்டா கிளாஸின் சிவப்பு நிறத்திற்கும், அந்த உருவத்திற்கும் கோகோ கோலா நிறுவனம் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது என்றாலும், அந்த உருவத்தை உலகளாவிய ஒரு ஐகானாக மாற்றிய பெருமை அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் யுக்திக்கே சேரும். குழந்தைகளைக் குதூகலப்படுத்திய அதே வேளையில், கோகோ கோலா நிறுவனத்தின் லாபத்தையும் இது பல மடங்கு உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
Read More : தவெகவில் வெடித்தது அதிகார மோதல்..!! விஜய் கார் முன் பாய்ந்த பெண் நிர்வாகி அஜிதா..!! பின்னணி என்ன..?



