பழம்பெரும் நடிகர் சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. படப்பிடிப்பில் ஒழுங்கு, காலம் தவறாமை ஆகியவற்றுக்குப் புகழ்பெற்ற சரோஜாதேவி அன்றைய நாயகியரில் அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் கொண்டவர். அவர் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்
கர்நாடகாவில் பிறந்த சரோஜா தேவி, 1955-ம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும் தனது அம்மாவுக்காக படம் நடிக்க ஒப்புக்கொண்டு, மகாகவி காளிதாஸ் படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் சரோஜா தேவிக்கு பட வாய்ப்பும் குவிய தொடங்கியது.
பார்த்திபன்கனவு, அன்பேவா, ஆசைமுகம், ஆலையமணி , கல்யாணபரிசு, எங்கள் வீட்டுப்பிள்ளை என அடுத்தடுத்து சரோஜா தேவி நடித்த படங்கள் அனைத்தும் அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தியில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் உடன் கிட்டத்தட்ட 26 படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். அதைப்போல சிவாஜி கணேசன் உடன் 22 படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ,ஹிந்தி போன்ற அனைத்து மொழி சினிமாக்களிலும் நடித்த சரோஜாதேவி எந்த மொழிகளிலும் தனக்கு வேறொருவரை டப்பிங் பேசுவதை விரும்ப மாட்டாராம் .அவருடைய சொந்த குரலிலேயே எல்லா படங்களிலும் நடித்து இருக்கிறாராம். அதற்காகவே அனைத்து மொழிகளையும் கற்று அறிந்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமாக்களிலும் சூப்பர் ஸ்டார்களாக இருக்கும் அனைத்து நடிகர்களுடனும் நடித்த பெருமை பெற்றவர். பெரும்பாலும் அவருக்கு சண்டைகள் போடுவது பிடிக்காதாம். அதனாலயே எம்ஜிஆர் படங்களில் சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்கும் போது அவர் இருக்க மாட்டாராம். படப்பிடிப்பில் இருக்கிறவர்களே சரோஜாதேவியை வெளியே அனுப்பி விடுவார்களாம் இல்லையென்றால் அவருடைய காட்சிகளை மட்டும் முதலில் படமாக்கி விட்டு அவரை அனுப்பி விடுவார்கள் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
Read more: “தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்..!!” அமித்ஷா கருத்துக்கு EPS பதிலடி