சரோஜா தேவி மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது.. CM ஸ்டாலின் இரங்கல்..

FotoJet 33 1 1

இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் சரோஜாதேவியின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது என்று முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான திருமதி சரோஜாதேவி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் திருமதி சரோஜாதேவி.


தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின் நெஞ்சினில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்
சரோஜாதேவி அம்மையார் அவர்கள்.

சுமார் 200 திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகிற்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ, பத்மபூஷன், இந்திய அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என எண்ணற்ற பெருமைகளைப் பெற்றவர். எப்போதும் இனிய முகத்துடனும், கனிவான பேச்சுடனும் காணப்படும் திருமதி சரோஜாதேவி அவர்களின் மறைவு எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : “மாபெரும் நடிகை சரோஜா தேவி இப்போது நம்முடன் இல்லை..” ரஜினி இரங்கல்..

English Summary

Chief Minister Stalin expressed his condolences, saying that the passing of Saroja Devi, who was known for her sweet face and kind words, is irreparable.

RUPA

Next Post

இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையா?

Mon Jul 14 , 2025
A powerful 6.7-magnitude earthquake struck Indonesia today
earthquake

You May Like