தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள வேளையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலாவின் அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால மௌனத்திற்கு பிறகு, தான் தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும், அதன் பெயரை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெறுமனே கட்சி தொடங்குவதோடு நிற்காமல், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி நிச்சயமாக களம் காணும் என்றும், அதற்கான முதற்கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே திரைமறைவில் தொடங்கிவிட்டன என்றும் சசிகலா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அவர், தற்போது நேரடியாக மக்கள் மன்றத்திற்கு செல்ல முடிவெடுத்திருப்பது, அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் இந்த அரசியல் பிரவேசம், குறிப்பாக தென்மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். தென்மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க குறிப்பிட்ட சமூக வாக்குகளைச் சசிகலாவின் புதிய கட்சி அறுவடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலாவின் இந்த நகர்வு அதிமுக தலைமைக்கு ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது. தொண்டர்களை தக்கவைத்துக் கொள்வதா அல்லது சசிகலாவின் சவாலை எதிர்கொள்வதா என்ற இரட்டை சங்கடத்தில் அக்கட்சி உள்ளது. அதே சமயம், புதிய கட்சிகளான தமிழக வெற்றிக் கழகம் போன்ற சக்திகள் உருவெடுத்து வரும் நிலையில், சசிகலாவின் வருகை பலமுனைப் போட்டியாக மாற்றப்போகிறது என்பது மட்டும் நிதர்சனம்.
Read More : அரசுப் பேருந்துகளில் இனி பாடல்கள் ஒலிக்க தடை..!! போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு..!!



