சனிக்கிழமை பெருமாளுக்கும், சனி பகவானுக்கும் உகந்ததாகும். சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட சனிக்கிழமையில் ராம பக்தரான அனுமனை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாகும். சனிக்கிழமையில் அனுமனை எப்படி வழிபட வேண்டும்? சனிக்கிழமையில் அனுமனை எதற்காக வழிபட வேண்டும்? அப்படி வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சனிக்கிழமைகளிலும் சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு வருவது அல்லல்களையெல்லாம் போக்கி அருளக்கூடியது. மனதில் பயத்தைப் போக்கக் கூடியது. மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்திக் கொடுப்பார் அனுமன் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீரத்தையும் ஞானத்தையும் தந்தருள்பவர் அனுமன் என்று போற்றுகிறது புராணம்.
சனி பகவானின் ஆதிக்கம் தான், நம் வாழ்க்கையின் சகலத்துக்கும் காரணம். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். அனுமனின் பக்தர்கள், சனி பகவானின் பெயர்ச்சி குறித்தோ, சனி பகவான் என்ன செய்வாரோ என்ன நடக்குமோ என்பது குறித்தெல்லாம் வருந்தத் தேவையில்லை.
அனுமனின் அருளிருந்தால், சனீஸ்வரரின் தாக்கம் வெகுவாக இருக்காது. அவரின் பரிபூரண அருளையும் பெறலாம் என்கிறது புராணம். எனவே, சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வது மிகவும் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.
சனிக்கிழமையன்று அனுமனை வழிபடுவது போலவே சனி ஓரை நேரத்திலும் அனுமனை வழிபட்டு பிரார்த்தனை செய்து கொண்டால், சகல எதிர்ப்புகளும் தவிடு பொடியாகும்.அனுமன் சாலீசா சொல்லி பாராயணம் செய்யுங்கள். அனுமனுக்கு வெற்றிலை மாலையும் துளசி மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதையெல்லாம் தந்தருள்வார் அனுமன். சனி பகவானின் கோபத்தில் இருந்தும், தாக்கத்தில் இருந்தும் நம்மை அரணெனக் காப்பார் அனுமன்.
அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு செய்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் துன்பங்களெல்லாம் அந்த வெண்ணைய் போலவே உருகிப் போகும்.தடைகள் நீங்குவதற்கு, காரிய வெற்றி பெற்றுவதற்கு, பயம் போவதற்கு, சனி உள்ளிட்ட நவகிரகங்களின் தோஷம் விலகுவதற்கு அனுமனை வழிபடுவார்கள். இதற்காக அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் வழக்கம் உள்ளது. அனுமனுக்கு வெற்றிமலை அணிவிக்கும் வழக்கம் வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது.
அனுமனுக்கு வெற்றிலை மாலை : ராமாயணத்தில் ராவணனோடு நடந்த போர் நிறைவடைந்து, ராமர் வெற்றி பெற்று விட்டார். இந்த தகவலை அசோகவனத்தில் ராமரின் வருகைக்காக காத்திருக்கும் சீதா தேவியிடம் விரைந்து சென்று தெரிவித்தார் அனுமன். இந்த செய்தியால் மனமகிழ்ச்சி அடைந்த சீதா தேவி, ஆஞ்சநேயருக்கு ஏதாவது பரிசு தர விரும்பினாள். உடனடியாக தனக்கு அருகில் படந்து சென்ற வெற்றிலைக் கொடியை எடுத்து, மாலையாக்கி அனுமனின் கழுத்தில் அணிவித்தாள் சீதை. மகாலட்சுமியின் அம்சமான சீதா தேவியின் கைகளால் அணிவிக்கப்பட்ட மாலையால் மனம் மகிழ்ந்தார் அனுமன்.
இதனால் சீதா தேவியை போன்று நாமும் வெற்றிலை மாலை அணிவித்தால், அதனால் மனம் மகிழ்ந்து நமக்கு அனுமன் வெற்றியை தருவார் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே வெற்றிலை மாலை சாற்றும் வழக்கம் வந்தது. பொதுவாகவே வெற்றிலை என்பது வெற்றியை தரக் கூடிய இலை ஆகும். அதன் காரணமாகவே அனைத்து விசேஷங்களிலும் வெற்றிலை முக்கியமான பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
எத்தனை வெற்றிலையில் மாலை கட்ட வேண்டும் ?இதே போல் அனுமனுக்கு சாத்தும் மாலையில் எத்தனை வெற்றிலைகள் வைக்க வேண்டும், அதில் பாக்கு வைத்து கட்ட வேண்டுமா, வெற்றிலையை சுழற்றி தான் கட்ட வேண்டுமா? விரித்த நிலையில் கட்டக் கூடாதா என பல சந்தேகங்கள் பக்தர்களுக்கு உண்டு. சாதாரணமாக எத்தனை வெற்றிலை வைத்து வேண்டுமானாலும் வெற்றிலை மாலை கட்டலாம். அனுமன் விக்ரஹம் அமைந்துள்ள உயரத்தை பொருத்து, எண்ணிக்கை வைக்கலாம். சிறியதாக இருந்தால் 16, 36, 51 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம். பெரிய சிலையாக இருந்தால் 108, 1008 என்ற கணக்கில் வைத்து கட்டலாம்.
வெற்றிலையுடன் பாக்கு வைத்தும் மாலை கட்டலாம். பாக்கு இல்லாமல் வெறும் வெற்றிலையை வைத்தும் மாலை கட்டலாம். பாக்குடன் சேர்த்து வெற்றிலை வைப்பது தாம்பூலத்திற்கு சமமானது. இதனால் சிறப்பான மங்கலம் தரக் கூடியது என்பதால் வெற்றிலையுடன் பாக்கு வைத்து, மாலையாக கட்டுவது நல்லது.
வெற்றிலை மாலை அணிவிப்பதால் கிடைக்கும் பலன்கள் : குடும்பத்தில் கணவன் – மனைவி பிரச்சனை, தொழிலில் தடை, வாழ்க்கையில் பயம், வியாபாரத்தில் உடன் இருப்பவர்கள் ஏமாற்றி விடுவார்களோ என்ற நிலை, தேர்வில் வெற்றி பெற வேண்டும், மனக்குழப்பம், எடுத்த காரியங்கள் வெற்றி அடைய வேண்டும், வீணான பயம் உள்ளவர்கள் அனுமனுக்கு சனிக்கிழமை, அமாவாசை, மூலம் நட்சத்திரம் வரும் நாட்களில் வெற்றிலை மாலை அணிவித்து வழிபடலாம்.
Readmore: நோட்..! மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம்…! அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!