தென் தமிழக மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்றைய வானிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நள்ளிரவு முதலே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழையின் வேகம் குறையாமல் நீடித்து வருவதால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் விடாது பெய்து வரும் கனமழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கியுள்ளது. நள்ளிரவு முதல் பெய்யும் தொடர் மழையால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனப் போக்குவரத்து ஆங்காங்கே முடக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மழையின் தீவிரம் குறையாத காரணத்தால் மாணவர்களின் நலன் கருதி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்களிடையே பலமாக எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் மழையின் அளவைப் பொறுத்து விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ள அரசு அதிகாரிகள், பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Read More : கூட்டணி முறிவு..? திமுக நிர்வாகிகளை சந்திக்க தேமுதிகவினருக்கு தடை..!! பிரேமலதா விஜயகாந்த் அதிரடி உத்தரவு..!!



