ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா மாவட்டத்தில், விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவியை அவரது தாத்தாவாக நடித்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 62 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிந்து மாதவ் கரிகாபதி அளித்த தகவலின்படி, டி. நாராயண ராவ் என்ற அந்த முதியவர், அரசுப் பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுமியை சம்பவத்தன்று காலை 11 மணியளவில் விடுதியில் இருந்து நைசாகப் பேசி தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அருகிலுள்ள ஒரு தோட்டத்தில் வைத்து அந்தச் சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், “அந்தச் சிறுமி சம்மதத்துடன் முதியவருடன் சென்றிருந்தாலும், சட்டம் ஒரு மைனர் பெண்ணின் சம்மதத்தை சம்மதமாக கருதுவதில்லை. மேலும், அவர் சிறுமியின் பெற்றோரின் சம்மதத்தை பெறவில்லை என்பதால், இது கடத்தல் மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான பாலியல் வன்கொடுமை குற்றமாகும்” என்று தெரிவித்தார்.
முதியவர் அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் காட்சி, பழத்தோட்டத்தின் உரிமையாளரால் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. உரிமையாளர் நேரடியாகப் புகார் அளிக்கவில்லை என்றாலும், இந்த வீடியோ வைரலானதால் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையை தொடங்கினர். சிறுமியின் வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர், போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்து முதியவரைக் கைது செய்தனர்.



