2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, நாம் தமிழர், தவெக கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாதக தனித்துத்தான் போட்டியிடும். தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டியிடுவோம்’’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: விஜய் வருகையால் நாதக வாக்குகள் குறையும் என தகவல்களைப் பரப்புகிறார்கள். நான் பயந்து, கூட்டணிக்குப் போய்விடுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். அரசியலில் விஜயகாந்த், வைகோ செய்த தவறை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.
தேர்தலில் தோற்று, நாம் தமிழர் கட்சி செத்து சாம்பல் ஆனாலும் தனித்தே போட்டியிடுவோம்’’ என்று ஆவேசமாக சீமான் பேசினார். மேலும் கருத்துக் கணிப்புகளை சுட்டிக்காட்டி, “ஒரு தொலைக்காட்சி இன்று 5%, நாளை 4% என்று சொல்கிறது; தேர்தல் முடிந்ததும் எக்சிட் போல்களில் வேறு எண்கள் காட்டுகிறார்கள். இவை நிஜ நிலையை பிரதிபலிக்கவில்லை” என ஊடகங்களை சீமான் கடுமையாக விமர்சித்தார்.
முதல் முறையாக 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி அப்போதிலிருந்து இன்றுவரை எந்த அரசியல் கூட்டணியிலும் இணையாமல், தனித்துப் போட்டியிடும் கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.