தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வரும் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தற்போது மற்ற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பதில் வேகம் காட்டி வருகிறது. குறிப்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க-வில் இணைந்திருப்பது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் டிசம்பர் 20, 2025 அன்று நடைபெறவிருக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் வேளையில், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் அமமுக பொதுக்குழு உறுப்பினர் கோவை நாகு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் த.வெ.க-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.
ஈரோட்டில் உள்ள மாநாட்டு திடலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
கொங்கு மண்டலத்தில் விஜயின் கட்சிக்குக் கிடைத்து வரும் இந்தத் தொடர் ஆதரவு, அக்கட்சியின் கள பலத்தை அதிகரித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், திராவிடக் கட்சிகளில் இருந்தும் மற்ற மாற்றுப் பாசறைகளில் இருந்தும் நிர்வாகிகள் த.வெ.க-வை நோக்கி வருவது, வரும் 2026 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
Read More : ரேஷன் கடைகளில் பெண்களுக்கு இலவச நாப்கின்..? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!



