தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் பகுதிகளில் தற்போது நிலவும் கட்சி தாவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை நோக்கி அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நகர்வுகளுக்கு பின்னணியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் மிக தீவிரமாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவில் நீண்ட காலம் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, தனது பழைய ஆதரவாளர்களையும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களையும் புதிய கட்சிக்கு இழுக்கும் பணியில் வேகம் காட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.கிருஷ்ணன் மற்றும் ஆண்டிப்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரியமுல் ஆசியா ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைந்துள்ளனர். இந்த அடுத்தடுத்த வெளியேற்றங்கள் அதிமுக தலைமைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே சூசகமாக தெரிவித்திருந்த செங்கோட்டையன், இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்றும், வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரே தவெக-வில் இணைவார்கள் என்றும் அதிரடியான தகவலை பகிர்ந்துள்ளார். அதிமுகவின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ தவெக-வில் இணைய தயாராக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



