தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) தேர்தல் களத்தில் இறங்கிய பிறகு, பிரதான கட்சிகளுக்கிடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
தற்போது அவர் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளைக் குறிவைத்து, அவர்களைத் தனது புதிய அரசியல் பயணத்தில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த அதிரடி அரசியல் மாற்றங்களின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் படலம் வேகம் எடுத்துள்ளது.
சேலம் சூரமங்கலம் பகுதிக்கு உட்பட்ட 20-வது வார்டு பகுதியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது தாய் கட்சிகளிலிருந்து விலகி, தவெக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழா, உள்ளூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், கோட்டை என கருதப்படும் சேலத்திலேயே அதிமுக மற்றும் ஆளுங்கட்சியான திமுகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது அந்தந்த கட்சிகளுக்குப் பின்னடைவாக கருதப்படுகிறது. செங்கோட்டையனின் வியூகத்தால் அடுத்தடுத்து பல மாவட்டங்களில் இருந்தும் முக்கிய தலைவர்கள் விஜய்யின் பக்கம் சாயக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026 தேர்தலில் பாரம்பரிய கட்சிகளுக்கு புதிய சவாலை உருவாக்கும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
Read More : ரூ.18 சிகரெட் இனி ரூ.72-க்கு விற்பனை..!! அமலுக்கு வருகிறது புதிய விலை..!! மத்திய அரசு தடாலடி உத்தரவு..!!



