தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செங்கோட்டையனின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அரசியல் களத்தில் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் இவர் டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து, இ.பி.எஸ். அவரை மொத்தமாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதன் பின்னணியில் செங்கோட்டையன் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது குறித்த பல யூகங்கள் வெளியாகி வருகின்றன.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய திட்டம்..?
தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை இன்று ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நவம்பர் 27ஆம் தேதி, விஜய் முன்னிலையில் செங்கோட்டையன், அவரது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் இணையவிருப்பதாகவும், இதற்காக அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இதற்காக அவரது ஆதரவாளர்கள் பலரும் சென்னை விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் ரூம் புக் செய்துள்ளதாகவும், இதனால், நாளைய அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
முன்னதாக, சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த செங்கோட்டையனிடம், தவெகவில் இணைவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் அந்தக் கேள்விக்கு நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தனது சமீபத்திய நீக்கம் குறித்து மனவேதனையுடன் பேசினார்.
“50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், பல ஏற்ற தாழ்வுகளைச் சந்தித்து, இயக்கத்திற்காக உழைத்த எனக்குக் கிடைத்த பரிசானது, நான் கட்சியின் உறுப்பினராக கூட இருக்கக் கூடாது என்ற முறையில் நீக்கப்பட்டிருக்கிறேன். இந்த மன வேதனை உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். இதற்கு மேல் நான் எந்த கருத்துக்களையும் சொல்வதற்கு இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன், புதிய கட்சியில் இணைவது குறித்த கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காமல், மாறாக தனக்குப் பொறுப்புப் பறிக்கப்பட்டது தொடர்பாக மட்டும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியிருப்பது, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற ஊகங்களுக்கு மேலும் வலுவூட்டி உள்ளது. ஒட்டுமொத்தமாக, செங்கோட்டையனின் இந்த நிலைப்பாடு, தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



