தவெக சார்பில் இன்று ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் உள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. விஜய் கட்சியில் செங்கோட்டையன் இணைந்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், கொங்கு மண்டலத்தில் தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் இந்த நிகழ்ச்சியை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தக் கூட்டத்தில் விஜய் குறைந்தது 30 நிமிடங்கள் உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய கூட்டத்தில் பிற கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் சில முன்னாள் அமைச்சர்கள் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை செங்கோட்டையன் ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பொறுத்திருந்து பாருங்கள்” என்ற பதிலுடன் அவர் அங்கிருந்து சென்றார். ஏற்கனவே அதிமுகவிலிருந்து பல முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்து கட்சியை வலுப்படுத்த உள்ளதாக செங்கோட்டையன் நிர்வாகிகள் மத்தியில் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், இன்று நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் சில முக்கிய அரசியல் பிரமுகர்கள் தவெகவில் இணையும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விஜய் முக்கிய அரசியல் அறிவிப்புகளை வெளியிடலாம் என்பதால், கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. கரூர் சம்பவத்துக்குப் பிறகும், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டம், அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாக பார்க்கப்படுகிறது.



