தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனுடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தைகளையும் நேரடியாக கையில் எடுத்துள்ளதால், தவெகவின் அரசியல் நகர்வுகள் வேகமடைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. செங்கோட்டையனைத் தொடர்ந்து, திராவிட பேச்சாளராக அறியப்படும் நாஞ்சில் சம்பத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
திமுகவைப் பொருத்தவரை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் வலுவான கூட்டணி அந்தக் கட்சியின் மிகப்பெரிய பலமாக உள்ளது. காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்த இந்த அணியை அரசியல் விமர்சகர்கள் “அசுரக் கூட்டணி” என வர்ணிக்கின்றனர்.
அதிமுக பக்கம் பார்க்கும்போது, பாஜக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்துள்ளன. பாமக தனது கூட்டணி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை, தேமுதிக ஜனவரியில் தனது முடிவை அறிவிக்கும் என அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளதும் அரசியல் சூழலை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியால் NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்த அரசியல் நகர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. “நாங்கள் சேரும் கூட்டணி பெரிய வெற்றி கூட்டணியாக இருக்கும்” என பேசி வரும் டிடிவி தினகரன் “விஜய் தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுப்பார்” எனவும் கூறிவருகிறார். அவரது பேச்சு தவெகவுடன் கூட்டணி அமையலாம் என்ற ஊகங்களுக்கு வலுவூட்டியுள்ளது.
அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான முயற்சிகள் பலனளிக்காத நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்துள்ளார். ஏற்கனவே “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” என்ற அமைப்பை தொடங்கியுள்ள அவர், அதனை அரசியல் கட்சியாக மாற்றி பாஜகவுடன் கூட்டணி அமைப்பார் என பேசப்பட்டது.
ஆனால் தற்போது, “ஓபிஎஸ் உறுதியாக விஜயுடன் தான் கூட்டணி வைப்பார்” என தமிழக வெற்றிக் கழக தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடந்து வருவதாகவும், டிசம்பர் இறுதியில் கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஜனவரியில் விஜயுடன் கூட்டணி அமைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



