ஹரியானா மாநிலம் பல்வல் மாவட்டத்தில் உள்ள சாயன்சா (Chayansa) கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அசுத்தமான குடிநீரை பயன்படுத்தியதால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள் காரணமாக, கடந்த 15 நாட்களில் மட்டும் 5 பள்ளிச் சிறுவர்கள் உட்பட மொத்தம் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இந்தக் கிராமத்தில் முதல் மூன்று மரணங்கள் நிகழ்ந்தன. அதன் தொடர்ச்சியாக, தற்போது பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 5,000 மக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் இன்று நிலமை மிகவும் மோசமாக உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் காய்ச்சல், இருமல், உடல் வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு வருகின்றனர். பலமுறை மருத்துவமனைக்குச் சென்றும், நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாகவே நீடிப்பது உறவினர்களை கலங்க செய்துள்ளது.
சுகாதாரத் துறையினர் கிராமத்தில் முகாமிட்டு நடத்திய சோதனையில், உயிரிழந்தவர்களில் சிலருக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்று இருந்ததும், மற்றவர்களுக்கு உடல் உறுப்புகள் செயலிழப்பு மற்றும் கல்லீரல் தொற்று ஏற்பட்டதும் தெரியவந்தது. கிராம மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நிலத்தடி தொட்டிகளிலும், வெளியில் இருந்து வரும் டேங்கர் லாரிகளிலும் தண்ணீரை சேமித்து வைக்கின்றனர். இங்கிருந்து எடுக்கப்பட்ட 107 குடிநீர் மாதிரிகளில் 23 மாதிரிகள் தோல்வியடைந்துள்ளன. அவற்றில் பாக்டீரியாக்கள் அதிகம் இருப்பதும், தண்ணீரை சுத்திகரிக்கப் போதுமான குளோரின் பயன்படுத்தாததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஹரியானாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை; இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் இது போன்ற குடிநீர் மாசடைவு மரணங்கள் எதிரொலிக்கின்றன. கடந்த 2025-ம் ஆண்டின் இறுதியில், இந்தியாவின் தூய்மையான நகரம் என்று பெயரெடுத்த இந்தூரிலேயே கழிவுநீர் குடிநீருடன் கலந்ததால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதேபோன்ற புகார்கள் தற்போது டெல்லி மற்றும் நொய்டாவின் பிரம்மபுத்திரா குடியிருப்புகளிலும் எழத் தொடங்கியுள்ளன. குழாய் வழியாக வரும் தண்ணீரில் பூச்சிகள் மற்றும் படிமங்கள் காணப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பழைய உள்கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீருடன் கலப்பதே இத்தகைய உயிர்ச்சேதங்களுக்கு முக்கிய காரணம் எனச் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு குடிநீர் விநியோகத்தை கண்காணிக்காவிட்டால், இது போன்ற நீர்வழித் தொற்று நோய்கள் மிகப்பெரிய பொது சுகாதாரப் பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.



