உடலுறவு என்பது வெறும் உறவு சார்ந்தது மட்டுமல்ல. அது உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இயற்கைச் செயல்பாடு என மகப்பேறு மற்றும் பாலியல் மருத்துவர் ஜெயராணி காமராஜ் தெரிவித்துள்ளார். தற்கால வாழ்வியல் சவால்களை எதிர்கொள்ளவும், ஆரோக்கியமான முதுமையைத் தக்கவைக்கவும் உடலுறவு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மன அழுத்தத்தை குறைத்து நெருக்கத்தை அதிகரிக்கும் :
தற்காலத்தில் பரவலாக இருக்கும் மன அழுத்தத்தை உடலுறவு வெகுவாகக் குறைக்கிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலையும் மனதையும் தளர்த்துகிறது. அலுவலகத்தில் அதிகப் பதற்றத்துடன் உரையாற்ற வேண்டிய நபர்கள், அதற்கு முன் உடலுறவு கொள்ளும்போது பதற்றம் குறைந்து, சிறப்பாகச் செயல்படுவது ஓர் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நாள்தோறும் தாம்பத்திய உறவுகொள்ளும் தம்பதிகளிடையே மனக்கசப்பும் சண்டைகளும் குறைந்து, நெருக்கம் அதிகரிக்கிறது.
வாழ்நாளை அதிகரிப்பதுடன் இளமை நீடிக்கும் :
சிறப்பான மற்றும் நிறைவான உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு ஆயுட்காலம் சுமார் 8 ஆண்டுகள் வரை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம் :
உடலுறவின்போது சில ஹார்மோன்கள் சுரப்பதால் இதயத்துடிப்பு அதிகரித்து, இதயத்தின் செயல்பாடு சிறப்பாகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்து, இரத்த அழுத்தம் சீராகிறது.
உடற்பயிற்சி :
சுமார் 20 நிமிடங்கள் வரை உறவுகொள்ளும்போது, கிட்டத்தட்ட 300 கலோரிகள் வரை சக்தி எரிக்கப்படுகிறது.
வயதாவதைத் தள்ளிப்போடும் :
உடலுறவின்போது சுரக்கும் ஹார்மோன்கள் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, செல்களைப் புத்துணர்வடையச் செய்கிறது. மேலும், DHA (Dehydroepiandrosterone) என்ற ஹார்மோன் சுரப்பதால் வயதான மாற்றங்கள் தள்ளிப்போகின்றன, இளமை நீடித்திருக்கிறது.
தூக்கமின்மை மற்றும் வலிகளுக்குத் தீர்வு :
தூக்கமின்மைப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு, அவர்களது பாலியல் உறவு மேம்படுத்தப்பட்டபோது, தூக்கமின்மை தானாகவே சரியாவது கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவில் ஈடுபடும்போது சுரக்கும் ஆக்சிடோசின் (Oxytocin) என்ற ஹார்மோன் மனதைத் தளர்வாக்கி நல்ல தூக்கத்தைத் தருகிறது. மேலும், உடலுறவின்போது Neurotransmitter எனப்படும் நரம்பியக்கடத்திகள் வெளியாவதால், தசைகள் தளர்வாகி உடல் வலிகள் குறைகின்றன. இந்த வகையில் உடலுறவு ஒரு சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்புகள் பலப்படும் :
உடலுறவு கொள்ளும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இவர்களுக்கு IgA இம்யூனோகுளோபுலின் என்ற நோய் எதிர்ப்பு அணுக்கள் அதிகமாகின்றன. இவை சளி, இருமல் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடி உடலைப் பாதுகாக்கின்றன. மேலும், வயதான பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பு குறையும்போது ஏற்படும் எலும்பு பலவீனப் பிரச்னையை உடலுறவு மூலம் சுரக்கும் ஹார்மோன்கள் சரிசெய்து, எலும்புகளை வலுவாக்குகின்றன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்யேக நன்மைகள் :
ஆண்கள் : போதுமான உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு விதைப்பை புற்றுநோய் (Prostate Cancer) வருவதற்கான வாய்ப்பு சுமார் 30% குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
பெண்கள் : 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்குப் பரவலாக வரும் சிறுநீர்ப் பை இறக்கம் மற்றும் சிறுநீரை அடக்க முடியாமல் போகும் பாதிப்புகளைத் தடுக்க, உடலுறவின்போது சுரக்கும் கூடுதலான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் மற்றும் பெண்ணுறுப்பில் ஏற்படும் உயவு தன்மை உதவுகின்றன.



